நாகர்கோவில். ஜன.18- கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட எட்டாங்குந்நு மலைப்பகுதியில் காணி இன பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, வன உரிமை சட்டத்தின் கீழ் நில உரிமை வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார். மேலும் ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் நலத்திட்ட உதவிகளும் கடைகோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பழங்குடியினர்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக அந்தப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து, அதற்கு தீர்வு காணும் வகையில்; தோட்டமலை, மாறாமலை, எட்டாம் குன்று, வளையம் தூக்கி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்களுடன் எட்டாங்குன்று குடியிருப்பில் வைத்து கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் நில உரிமை வழங்கப்படும் என்றும் அதற்கு அரசு தயாராக இருக்கிறது என்றும் வரும் நிதியாண்டில் இப்பகுதி மக்களுக்கு அதிகமான அளவில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. மேலும் தகுதியுள்ள நபர்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவதற்கு கிராம சபாக்களும் பொதுமக்களும் கோட்ட அளவிலான கமிட்டி உறுப்பி னர்களும், மாவட்ட அளவிலான கமிட்டி உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவ்வாறே கிராம சபாக்களும் கோட்ட மற்றும் மாவட்ட கமிட்டி உறுப்பினர்களும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அனில்குமார், திருவட்டார்; வட்டாட்சியர் கந்தசாமி, திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர், வனத்துறை அலுவலர்கள், வன உரிமைச் சட்ட கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.