திருவள்ளூர், ஆக 27- விஷ்ணு வாக்கம் பேருந்து நிழற் குடை அமைப்பது குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என திருவள்ளூர் கோட்டாட்சியர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையின் முடிவில் தெரிவித்தார். விஷ்ணுவாக்கத்தில் பிரச்சனைக்குரிய இடத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க கட்டுமான பணி வெள்ளியன்று (ஆக.26) எந்த அறிவிப்பும் இன்றி திடீரென துவங்கப்பட்டது. இதனைத் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து திருவள்ளூர் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதன் படி திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமையன்று (ஆக 27) அன்று கோட்டாட்சியர் ஏ.பி.மாகா பாரதி தலைமையில் நடை பெற்ற அமைதி பேச்சுவார்த்தை யில் வட்டாட்சியர்மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீ.காந்திமதிநாதன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், வட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கலையர சன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். ஏற்கனவே அதிகாரிகள் தீர்மானித்த இடத்தில் பேருந்து நிழற்குடை கட்ட வேண்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 23 சென்ட் அரசு நிலத்தை மீட்க வேண்டும், சாதிய பாகுபாடு நிலவுவதால் ஆதிக்க சாதியி னருக்கு துணை போககூடாது என சிபிஎம் தலைவர்கள் வலி யுறுத்தினர். எதிர்தரப்பினரின் கோரிக்கைகளையும், பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கருத்துக்களையும் கோட்டாட்சியர் கேட்டார். அதன் பிறகு பேசிய அவர், அடுத்த 15 நாட்களுக்குள் இப்பி ரச்சனைக்கு தீர்வு காணப்படும். அதுவரை பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்றார்.