தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு, தஞ்சாவூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மில்லர் பிரபு, தலைவர் மணிமாறன், ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி, எம்.கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினர். மாட்டுவண்டி சங்க நிர்வாகிகள் அதிராம்பட்டினம் கே.சோமசுந்தரம், பட்டுக்கோட்டை ஜி.பொன்னுசாமி, மூர்த்தி, ஜெ.முருகேசன், திருச்சிற்றம்பலம் செல்வம், ஊரணிபுரம் திருப்பதி, பூதலூர் இமானுவேல், திருவையாறு சுதாகர் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பட்டுக்கோட்டை வட்டம், குறிச்சி, அக்னி ஆற்றில், மாட்டு வண்டியில் மட்டும் மணல் எடுக்க தனி மணல் குவாரி அமைத்திட வேண்டும். மணல் சேமிப்பு கிடங்கிற்கு மணல் அள்ளி வைப்பதை அரசே ஏற்று நடத்த வேண்டும். லாரிக்கான மணல் குவாரியில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க 20 சதவீதம் வரை அனுமதிக்கப்படும் என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். லாரிக்கான மணல் குவாரியில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.