இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மதுரையில் இன்று மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிபிஐ(எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.,, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் அ.ரவிச்சந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது எம்.எல்.ஏ., அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
தீர்மானம் 1 :
மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும், மொழிவழி மாநிலங்களுக்காக நடந்த வீருகொண்ட போராட்டமும் கூட்டாட்சி இந்தியாவிற்கு அடித்தளமாக அமைந்தன. இருப்பினும், நடைமுறையில் ஏராளமான அதிகாரங்கள் ஒன்றிய ஆட்சியிடம் குவிக்கப்பட்டுள்ளன.
1950களில் மொழிவழி மாநிலங்களுக்காக நடைபெற்ற போராட்டமும், 1956ஆம் ஆண்டு இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட சூழ்நிலையில் மாநில உரிமைகளுக்கான குரல் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின் ராஜமன்னார் ஆணையம் (1969) அமைக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சியின் மத்திய, மாநில உறவுகள் பற்றிய குறிப்பாணையும், 1983 ஆம் ஆண்டில் ஸ்ரீநகரில் மத்திய, மாநில உறவுகள் பற்றிய எதிர்க் கட்சிகள் மாநாடும் கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கான வலிமையான வெளிப்பாடாக அமைந்தன. இந்த பின்னணியிலேயே, 1983 ஆம் ஆண்டில் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது (1990) மிக முக்கியமான வளர்ச்சிப்போக்காக அமைந்தது.
இருப்பினும், பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் அழுத்தத்தில் இருந்து பல்வேறு அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகளும் இதே காலத்தில் தொடர்ந்தன. இப்போது ஒன்றிய ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக /ஆர்.எஸ்.எஸ், ஒற்றை ஆட்சியையே தனது இலக்காக கொண்டு கூட்டாட்சி ஏற்பாட்டை மொத்தமாக சிதைத்துப் போட முயற்சிக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை முடக்கிப் போட்டும், கூட்டாட்சிக்கு எதிரான அம்சங்களை வலுவாக பயன்படுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காமலும், எல்லா முனைகளில் இருந்தும் கூட்டாட்சி ஏற்பாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. கூட்டாட்சி கோட்பாடும், மதச்சார்பின்மையும் பன்மைத்துவ பரிமாணத்தை உள்ளடக்கியது. தங்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை (ஒரே மதம்) அமலாக்கிட எதேச்சதிகார, ஒற்றை ஆட்சி முறையை முன்னெடுக்க மாநில உரிமைகளை மறுக்கிற போக்கை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
அரசியல் சட்ட ஷரத்து 370வது பிரிவினை அதிரடியாக நீக்கி ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளை பறித்து, அம்மாநிலத்தை துண்டாடி லடாக் பகுதியை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் மதச்சிறுபான்மை மக்களின் சிறப்புரிமைகளையும், குடியுரிமையையும் பறித்து அம்மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முனைகிறது.
அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய ஆட்சி மொழிகளாக்க மறுத்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பில் மூர்க்கத்தனமாக மோடி அரசு ஈடுபடுகிறது. மொழிச் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிராகரிக்கிறது.
பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனே திட்ட ஆணையத்தை கலைத்து ‘நிதி ஆயோக்’ உருவாக்கப்பட்டது. பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளும் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை வெட்டி ஒன்றியத்தில் குவித்தன. புழக்கத்திலிருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என தானடித்த மூப்பாக அறிவித்தது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமலாக்கி மாநிலங்களுக்கான வரி இனங்களை சுருக்கியுள்ளன. மாநிலங்களுக்கு சேரவேண்டிய முறையான நிதிப் பகிர்வில் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. 14வது நிதி ஆணையம், நாட்டின் மொத்த வரிவருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பங்கு 42 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதே அநியாயம், ஆனால் பாஜக அரசோ நடைமுறையில் வெறும் 30.4 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு அளித்துள்ளது.
ஜி.எஸ்.டி ஈவுத்தொகைக்காகவும், ஈட்டுத் தொகைக்காகவும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரி இனங்களில் மாநில அரசுகளுக்கு பங்கு இருந்தது. ஆனால், தற்போது அந்த வரியும் மத்திய அரசிடமே குவியும் விதத்தில் செஸ் வரியாக விதிக்கப்படுகிறது. மாநில பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறைக்கு வரம்பு வைப்பதன் மூலமும் (குசுக்ஷஆ) மாநில செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் நேரடியாக தலையிடுவதற்கு ஆளுநர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சட்டமன்றங்கள் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர்களே கிடப்பில் போடுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தை அவமதிப்பதையும், அமைச்சரவையின் அதிகாரத்திலும், முதலமைச்சரின் அதிகாரத்திலும் வரம்பு மீறி தலையிடுவதையும் தயக்கமின்றி மேற்கொண்டு கண்டனங்களை எதிர்கொள்கிறார்.
ஒன்றிய அரசின் முகமைகளான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ ஆகிய அனைத்தும் பாஜக அரசியலின் ஏவலாட்களாக மாற்றப்பட்டுள்ளன. எம்.எல்.ஏக்களை விலைபேசவும், ஆட்சிக் கவிழ்ப்பிற்குமான கருவிகளாக இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலக் கட்சிகள் மிரட்டப்படுகின்றன.
மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்து, ஒரே நாடு ஒரே கல்வி என்ற அடிப்படையில் மாநிலங்களால் எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாமல் செய்ய முயற்சி நடக்கிறது. கல்வியில் பெருமளவில் வணிகமயத்தை புகுத்துவதும், பாடத்திட்டங்களை மதவெறிமயமாக்குவதும் ஒருசேர நடக்கின்றன. தேசிய கல்விக் கொள்கையின் பெயரால் இந்த அராஜகம் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. இப்போது ஒட்டுமொத்த மருத்துவ இடங்களையும் ஒன்றிய அரசே நிரப்பிட முயற்சிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கும் ஆபத்து எழுந்திருக்கிறது.
உள்ளாட்சி மன்றங்களின் செயல்திறனை மேம்படுத்துவது என்கிற பெயரால் சொத்து வரி, பயனாளிகள் கட்டணங்கள் மற்றும் சேவை கட்டண உயர்வுகளை அமலாக்க ஒன்றிய அரசு மாநிலங்களை நிர்பந்தப்படுத்துகிறது. இந்த வரி, கட்டண உயர்வுகளை அமலாக்கவில்லை என்றால் உள்ளாட்சி மன்றங்களுக்கான பல்வேறு வகையான நிதி, மான்யங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசு வெட்டிக் குறைத்து வருகிறது. இந்த வரி, கட்டண உயர்வுகளால் மக்கள் அடையும் இன்னல்களை கண்டு கொள்ளாமல், உள்ளாட்சி அடித்தள ஜனநாயகத்தையும் பாஜக அரசு காலில் போட்டு மிதித்து வருகிறது.
மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள கூட்டுறவு, விவசாயம், மின்சாரம் ஆகியவற்றில் ஒன்றிய அரசு தலையிடுகிறது, விதிகளையும் சட்டங்களையும் இயற்றுகிறது. ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை சிதைக்கிறது. ரேசன் பொருட்களான அரிசி, கோதுமை மற்றும் பிற தானிய ஒதுக்கீடு, கிராமப்புற ஊரக வேலை உறுதி திட்ட நிதி ஒதுக்கீடு என அனைத்திலும் தன்னிச்சையான முடிவுகளை ஒன்றிய ஆட்சியே மேற்கொள்கிறது. தேவைக்கும் குறைவாக வெட்டிச் சுருக்குகிறது.
ஒன்றிய ஆட்சியிடமே அதிகாரம் குவிந்தால் பாரபட்சத்தையே உருவாக்கும் என்பதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு நடைமுறை உதாரணம் ஆகும். மாநில அரசு முன்னெடுத்த திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டும் என்கிற மாநில அரசின் வலியுறுத்தலை ஏற்றுக் கொண்ட ஒன்றிய மோடி அரசு 2019ல் அடிக்கல் நாட்டியது. இன்றுவரை அப்படியே நிற்கிறது. இது தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகும். தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் வழியாக கீழ்க்கண்டவைகளை வற்புறுத்துகிறேம்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டு ஒன்றிய ஆட்சி வற்புறுத்தும் பொருளாதாரக் கொள்கைகளால் சிறு குறுந்தொழில்கள் நசிவை எதிர்கொள்வதும் அதிகாரக் குவிப்பின் அபாயகரமான வெளிப்பாடே ஆகும்.
இப்படியான சூழலில்தான், இந்திய கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநில உரிமை முழக்கத்தை உரத்து ஒலிக்கவும் சி.பி.ஐ(எம்) இம்மாநாட்டை நடத்துகிறது.
இந்த மாநாட்டின் வழியாக,
* இந்திய ஒன்றியத்தை கூட்டாட்சி ஜனநாயமாக வலுப்படுத்துவோம். மூன்றடுக்கு அதிகாரப் பரவலை வலியுறுத்துவோம்.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
* ஆளுநர் வழியாக மாநில ஆட்சி அதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளை இந்த மாநாடு கண்டிக்கிறது. மாநில அரசுக்கு மேம்பட்ட சக்தியாக ஆளுநர்களை பயன்படுத்துவதை முற்றாக எதிர்த்து நிற்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆளுநர்களின் அதிகாரத்திற்கு சட்ட வரம்பிட வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
* ஒன்றிய விசாரணை முகமைகளை ஏவி விட்டு, மாநில ஆட்சிகளை கவிழ்ப்பதும், கட்சிகளை மிரட்டுவதும் விலை பேசுவதும் ஜனநாயகத்திற்கே விடப்பட்டுள்ள சவாலாகும். இத்தகைய போக்குகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
* மாநிலங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் வரி அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
* அரசியல் சாசன 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அங்கீகரித்திட வேண்டும். தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்தி சமஸ்கிருத திணிப்பை முற்றாக கைவிட வேண்டும். தாய்மொழி வழியில் பயிற்று மொழி நிர்வாக மற்றும் அலுவல் மொழியாக உறுதி செய்திட வேண்டும்.
* தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அழித்தொழிக்க பல்வேறு முனைகளிலும் இருந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து, இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட இம்மாநாடு உறுதியெடுக்கிறது.
* தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். மாநிலங்கள் தங்களுக்கான தனித்த கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும்.
* கூட்டுறவு, மின்சாரம், விவசாயம் மற்றும் தொழிலாளர் துறைகளில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, அரசமைப்புச் சட்ட விரோத தலையீடுகளை கைவிட வேண்டும். கூட்டுறவுத் துறையை ஒன்றிய அரசு கைப்பற்றும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது.
* ஒன்றிய அரசின் நிதியோடு செயல்படும் திட்டங்களில் மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப அமலாக்குவதற்கான சுதந்திரத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது. ரேசன் பொருட்கள் (அரிசி, தானியம்) ஒதுக்கீடு, நூறுநாள் வேலை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப அமைய வேண்டும். ரேசன் கடைகளை மூடிடும் ஒன்றிய ஆட்சியின் முயற்சிகளையும், நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைப்பதையும் இம்மாநாடு கண்டிக்கிறது.
* திட்ட ஆணையம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். தேசிய வளர்ச்சி ஆணையம் உரிய அதிகாரத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நிதி ஆணையங்கள், மாநிலத்தின் பார்வையை உள்ளடக்கி செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.