districts

img

இராஜபாளையம் அருகே அடிப்படை வசதி கோரும் மக்கள்

இராஜபாளையம், அக்.7- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட அயன் கொல்லங்கொண்டான் கிராமம் உள்ளது. கீழ் பகுதியில் 6 தெருக்களும் மேல் பகுதியில் பள்ளிக்  கூடத் தெரு, இந்திரா குடியிருப்பு, பிள்ளையார் கோவில் தெரு என 12 தெருக்கள் உள்ளன.  சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமமாகும். இங்கு மிகப் பழமையான இடர் தவிர்த்த சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவன் கோயில் அமைந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டுவருகிறது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தெருக்க ளும் தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதித்தனர். இதனால் நடப்பதற்கு கூட லாயக்கற்ற தெருவாக இருந்து வருகிறது. குழிகள் தோண்டும் போது வாறுகால்கள் சேதமடைந்து மண் மேவி கழிவு நீர் வெளியே செல்ல வழியின்றி ஆங்காங்கே  தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதனால் நோய்தொற்று ஏற்பட்டு மக்கள் மருத்துவ மனைக்கு செல்வது அதிகமாகி வருவது தொடர்கதையாக உள்ளது. குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. சில இடங்களில் சேறும் சகதியுமாக மாறி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. ஊருக்கு வடக்கே சுமார் ரூ.2- லட்சம்  மதிப்பீட்டில் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது. இதற்கு தேவையான தண்ணீர் வசதி செய்யவில்லை. இன்னும் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து வருகிறது. கழிவறையின்றி இட நெருக்கடியில் அங்கான்வாடி மையம் செயல்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எனவே கிராம மக்கள் வாறு கால்களை தூர்வாரி சுகாதாரம் பேண கோரியும், குடிநீர் வீணாவதை தடுக்க கோரியும், சுகாதார வளாகத்தை திறக்க கோரியும் வேண்டுமென அதிகாரிகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.