அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்திடுக! ஆத்தூரில் விவசாயிகள் கோரிக்கை
சின்னாளப்பட்டி, பிப்.19- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் முதல்போக நெல் அறுவடை பணிகள் தொடங்கி விட்டதால், அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் ஐ.ஆர்.51 ரக நெல் நாற்றுகளை நடவு செய்திருந்தனர். நெற்கதிர்கள் நன்கு விளைந்துள்ளன. ஒருபுறம் இயந்திரம் கொண்டு நெல்லை அறுவடை செய்யும் விவசாயிகள் மறுபுறம் நெல்களை உலர்த்த களத்துமேட்டிற்கும், கொள்முதல் நிலையத்திற்கும் டிராக்டர் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில், ஆத்தூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஆத்தூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஆத்தூர், பழைய செம்பட்டி, அக்கரைப்பட்டி, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, தருமத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யும் நெல்களை, கடந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் அமைத்த அதே இடத்தில், தற்போது, குவியல் குவியலாக கொட்டி வைத்து மூடி வைத்துள்ளனர். தற்சமயம் மழை பெய்தால், நெற்குவியல்கள் மழைக்கு நனைந்து விடும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், சேடப்பட்டி, போடிகாமன்வாடி, சொக்க லிங்கபுரம், வீரசிக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று, கடந்த வாரம் சித்தை யன்கோட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. அதே போல், ஆத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக ஆத்தூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டாசுகளை பதுக்கிய இருவர் மீது வழக்கு
சிவகாசி, பிப்.19- சிவகாசிஅருகே பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவகாசி கிழக்கு காவல்துறையினர் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர்.கீழபெத்துலுப்பட்டி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகே சென்ற போது, தகர கொட்டகையில் முழுமை பெறாத பலதரப்பட்ட பட்டாசு கள் பதுக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவற்றை கைப்பற்றிய போலீசார், விஸ்வத்தம் பகுதி யைச் சேர்ந்த கார்த்திக் (41), செல்லையநாயக் கன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (43) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இருக்கன்குடி கோவிலில் ரூ.81 லட்சம் உண்டியல் வசூல்
சாத்தூர், பிப்.19- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உள்ளது. இங்கு மாதம் ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி 10 நிரந்தர உண்டியல், 4 தற்காலிக உண்டியல்கள் உள்பட 14 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் ரூ. 81 லட்சத்து ஆயிரத்து 488 பணம். தங்கம் 309 கிராம்.வெள்ளி 1014 கிராம் கிடைத்தது. உண்டியல் என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி.ஆகிய ஊர்களை சேர்ந்த பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.