நாகரகோவில், செப்.12- கன்னியாகுமரி மாவட்டம் பள்ளவிளை கிரிஸ்ட் அவன்யூ பகுதியைச் சார்ந்த ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல் (41). அவர் கடந்த 08.09.2024 அன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியதில் ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்களால் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதை உறவினர்களிடம் எடுத்துரைத்தனர். பின்பு மீண்டும் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 10.09.2024 அன்று இரவு 8.35 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 11.09.2024 அன்று அவரின் மூளை செயலழிந்து இருப்பதை அவரது உறவினர்களுக்கு தெளிவாக எடுத்துரைந்தனர். பின்பு அவரது உறவினர்கள் தாமாக முன்வந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். அதன்பின்பு, தமிழ்நாடு உறுப்புமாற்று ஆணையத்தின் உறுப்பு காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில், அன்னராது கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், கருவிழிகள் திருநெல்வேலி அரவிந்த் மருத்துமனைக்கும், தோல் மதுரை மருத்துமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. பின்பு அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மூளைச்சாவு அடைந்து தனது உறுப்புக்களை தானம் செய்த ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல் உறவினர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்ததோடு, அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி மலர் வளையம் அணிவித்து மரியாதை செலுத்தினார்.