districts

img

இடுக்கி கல்வாரி மவுண்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு மாயாஜால உலகம்

கட்டப்பனை, செப்.9 - மழை ஓய்ந்து ஓணம் வந்துவிட்டது. ஹைரேஞ்சில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இடுக்கி சுற்றுலா வட்டாரத்தின் முக்கிய மையமான கல்வாரி மவுண்ட் வியூபாயிண்ட் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. தினமும் 500 முதல் 700 பேர் வந்து செல்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 2700 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய நிலம், கேரளாவின் சுற்றுலா வரைபடத்தில் இடம் பிடித்தது அண்மைக் காலத்தில்தான். இங்குள்ள நிலப்பரப்பு பாறை மற்றும் புல் மலைகள், மலையின் உச்சியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையைச் சுற்றியுள்ள இடுக்கி நீர்நிலையின் தொலைதூரத் தோற்றம், கல்யாண்தாண்டின் சரிவுகளில் வழியும் பனி, மலையடிவாரத்தில் உள்ள பசுமையான காடுகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள தீவுகள் ஆகியவற்றின் கலவையானது வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டவை. இந்த இடம் வட இந்திய மாநிலங்கள் மற்றும் மலபார் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக மாறியுள்ளது. செருதோணி-கட்டப்பனா வழித்தடத்தில், இடுக்கி அணையின் மேற்பகுதியைக் கடந்ததும், சில கிலோ மீட்டர்கள் சென்றால், கல்வாரி மலையை அடையலாம். இருபுறமும் வேலி அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தின் நடுவே காட்சிப் புள்ளியை சென்றடையலாம். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது தினமும் 2000-க்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர். நவராத்திரி பண்டிகையை கொண்டாட 25,000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருகின்றனர். குடும்பத்துடன் பல நாட்கள் இங்கு தங்கி, காட்சிகளை ரசித்துவிட்டு திரும்புகின்றனர். இங்கு 50-க்கும் மேற்பட்ட ஓய்வு விடுதிகளும் (ரிசார்ட்), தங்கும் விடுதிகளும் இயங்கி வருகின்றன. கட்டப்பனை கல்யாண்தாண்டு மலையில் பூத்துக் குலுங்கும் மேட்டுக்குறிஞ்சியை காண தினமும் மக்கள் வருகின்றனர்.