districts

அய்யலூர் வனப்பகுதியில் மண் கொள்ளை விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் புகார்

திண்டுக்கல், ஜுலை.21 திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனப்பகுதியில் பொக்லைன் மூலம் மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பாக ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பழனி அருகேயுள்ள பச்சையாற்றில் ஜுலை 17 அன்று மணல் அள்ளிய அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஜுலை 19 அன்று  வடமதுரை அருகே யுள்ள அய்யலூர் அய்யனார் கோவில் மலைப்பகுதி யில் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 6 லாரிகளில் மண் அள்ளுவது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி கள் வெளியாகி உள்ளன. சுமார் 15 அடி ஆழம் வரை  சட்டத்திற்கு புறம்பாக மண் எடுத்துள்ளனர். வருவாய்த் துறையினர் மண் அள்ளியவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகளின் இது போன்ற பாரபட்சமான போக்குகள் கண்டிக்கத்தக்கவை. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் மண் வளத்தை கொள்ளையடிப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும், மண் அள்ளுபவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.