குழந்தை இல்லாத தம்பதியர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க அழைப்பு
நாகர்கோவில், செப்.12- குழந்தை இல்லாத தம்பதியர்கள் வருத்தத்தை விட்டு ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்களாம் என குமரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி குழந்தையில்லாதவர்களிடம் விசாரத்தபோது, எனக்கு திருமணமாகி பதினேழுவருடங்களாக குழந்தை இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். குழந்தைபெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தனியார் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிட்சைகள் பல மேற்கொண்டேன். அதனால் எனக்கு மிகுந்த பொருட்செலவு, உடல் உபாதைகள், மன வேதனைகள் ஏற்பட்டது. அவ்வாறு நான் பட்ட கஷ்டத்திற்கு பலனாக 23.02.2024 அன்று நான் கவுறுற்றிருக்கின்றேன் என்ற செய்தியை மருத்துவர் என்னிடம் தெரிவித்தார். நானும் என் குடும்பத்தாரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். எனக்கு பிரசவ தேதி 15.10.2024 என்று மருத்துவர் தெரிவித்திருந்தார், ஆனால் திடீரென்று ஒரு நாள் என்னுடைய எட்டாவது மாதத்தில் எனக்கு இரத்த அழுத்தம் அதிகரித்தது. இதனால் எனக்கு வலிப்பு ஏற்பட்டது. அதற்காக நான் எப்போதும் செல்லும் அதே தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சை எடுப்பதற்காக சென்றிருந்தேன். என்னை பரிசோதித்த மருத்துவர் எனக்கு இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதால் அறுவை சிகிட்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாpந்துரை செய்தார். அங்கு எனக்கு காலை 5 மணி அளவில் ஒரு பெண் குழந்தை (எடை-1.3கி.கி.) மற்றும் ஒரு ஆண் குழந்தை (எடை-1.5 கி.கி.) அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. அறுவை சிகிச்சை முடிந்தவுடன் எனக்கு அதிக அளவு உதிரப்போக்கு ஏற்பட்டது. அதனால் எனது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. எனக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிட்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். உயிருக்கு போராடிய நிலையில் 43 வயதை கடந்த நான் இவ்வாறு செயற்கை முறையில் கருவுறாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்திருந்தால் இந்நேரம் இந்நிலை எனக்கு நிகழ்ந்திருக்காது. நான் இழப்பது என் உயிர் மட்டுமல்ல என் குழந்தைகளின் எதிர்காலமும், என் குடும்பத்தினாரின் சந்தோஷமும். ஆகவே, என்னைப் போன்ற 40 வயதை கடந்தவர்கள் இவ்வாறு செயற்கை முறை கருத்தரித்தலை தவிர்த்திடுங்கள். என்றார். மற்றொருவர் கூறுகையில், எனக்கு திருமணமாகி எட்டு வருடங்களாக குழந்தை இல்லை. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் வேறொரு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று, 2023-ஆம் ஆண்டு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மூலம் கருத்தரித்தேன். சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு அருகிலேயே வீடு பார்த்து தங்கியிருந்தேன். எனக்கு பிரசவ தேதி 20.09.2024 என்று மருத்துவர் தெரிவித்திருந்தார். எனக்கு அன்று மாலை அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தை பிறந்தவுடன் எனக்கு இரத்தபோக்கு அதிகமாக இருந்ததால் எனது கர்ப்பபை நீக்கப்பட்டது. நான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படடிருந்தேன். மேல் சிகிட்சைக்காக என்னை தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு எனக்கு உயிர் காக்கும் உயர் சிகிட்சைகள் பல வழங்கப்பட்டன. ஆயினும் எதுவும் கைகொடுக்கவில்லை. இவ்வாறு குழந்தை இல்லாத தாய்மார்கள், பணத்தைச் செலவழித்து, உடல் நலத்தையும் கெடுத்துக்கொள்வதைவிட ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து அவர்களுக்கும் வாழ்வளிக்கலாம்.
த.வெள்ளையன் மறைவு; குமரியில் கடைகள் அடைப்பு
நாகர்கோவில், செப். 12- தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக குமரி சுற்றுலா தலத்தில் இன்று அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைப்பு. குறிப்பாக காந்திமண்டபம்,கடற்கரை சாலை,ரதவீதி, ரவுண்டானா உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள உணவகங்கள் அழகு சாதன பொருட்கள் கடைகள், தள்ளுவண்டி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.குமரி சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது.
விவசாயியை தாக்கியவர் கைது
குழித்துறை, செப்.12- இரணியல் அருகே குருந்தன்கோடு வீர விளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (59) தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சமுத்திர பாண்டியன் (43). நிலம் பிரச்சனை தொடர்பாக இவர்களுக்கு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை அவ்வழியே வந்த சுப்பிரமணியனை சமுத்திர பாண்டியன் மற்றும் அவரது மகன் பரத் ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுப்பிரமணியன் ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸார் சமுத்திர பாண்டியனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செப்.20: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகர்கோவில், செப்.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் செப்.20 வெள்ளியன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஆகஸ்ட் 2024 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஊராட்சி, வட்டார அளவில் பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டி
நாகர்கோவில், செப்.12- கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வட்டாரங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர்களுக்கு போதிய ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ரத்தசோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் விதமாகவும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொருட்டு கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் ‘ரத்தசோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா மூன்று நிலைகளில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 9 வட்டாரங்கள் மற்றும் 95 கிராம ஊராட்சிகளிலும் நடக்கவிருக்கிறது. ஊராட்சி அளவிலான போட்டிகள் 13, 14.09.2024 ஆகிய தேதிகளில் (இன்றும் நாளையும்) அந்தந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களிலும், வட்டார அளவிலான போட்டிகள் 19.09.2024, மற்றும் 20.09.2024 ஆகிய தேதிகளில் அந்தந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் அனைத்து சுய உதவிக் குழு உறுப்பினர்களும் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
த.வெள்ளையனுக்கு இறுதி அஞ்சலி 40 ஆயிரம் கடைகள் அடைப்பு
தூத்துக்குடி, செப்.12- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவர் தமிழகத்தில் முதன் முதலில் வியாபாரிகளை ஒன்றிணைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் பேரவை என்ற அமைப்பை தொடங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் ஒன்றிணைத்து வியாபாரிகளின் நலனுக்காக பாடுபட்டவர். இவர் உடல் நல குறைவு காரணமாக செவ்வாயன்று காலமானார். இவரது உடல் சொந்த கிராமமான திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வணிகர்கள் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்,ஏரல், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கடைகளை அடைத்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தூத்துக்குடி, செப்.12- தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.80 ஆயிரம் சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் LAW OFFICER போன்ற பல்வேறு பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BL/LAW தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000 - ரூ.80,000/- வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதள பக்கத்தில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை மேட்டுத்திடல் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்
திருநெல்வேலி, செப்.12- பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல் வேலி மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாளையங்கோட்டை வடக்கு மேட்டுத்திடல் சாலையில் அண்ணா நகர் பேருந்து பேருந்து நிறுத்தம் நிறுத்தம் அருகேயுள்ள சிறுபாலத்தினை பெட்டி பாலமாக மாற்றும் வகையில் புதன்கிழமை முதல் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே, அந்தப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுத்திடல் நோக்கி செல்லும் அனைத்து/ இலகுரக வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் கிருஷ்ணா மருத்துவமனை வழியாக இந்திராநகர் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு வலதுபுறம் திரும்பி பெரியார்நகர் சாலையில் நேராக செயின்ட் தாமஸ் சாலை வந்துஇடதுபுறம் திரும்பி மேட்டுத்திடல் ரவுண்டானா செல்ல வேண்டும். இதேபோல, மேட்டுத்திடல் ரவுண்டானாவில் இருந்து வடக்கு மேட்டுத்திடல் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பாளை. மரியா கேன்டீன் வழியாகச் செல்லும் வாகனங்கள் தாமஸ் சாலையில் ஏ.ஆர். லைன் சாலை கடந்துவலது புறம் திரும்பி சேவியர் கல்லூரி விடுதி சாலை வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தல்
திருநெல்வேலி செப் 12- அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி 313இல் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உத வியாளர்களை தேர்தல் வாக்குறுதியின் படி அரசு ஊழியராக ஆக்கிட வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் ராஜன், அங்கன்வாடி ஊழியர் கள் மற்றும் உதவியாளர் கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஞானம்மாள், மாவட்ட தலைவர் பிரேமா, பொருளாளர் ஜூலிற்றா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி அனைத்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.
ரயில்வே துறையின் பாராட்டை பெற்ற திருநெல்வேலி ரயில் நிலையம்
திருநெல்வேலி, செப்.12- நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கூடுதல் அங்கீகாரம் பெற்று என்எஸ்ஜி 2 பிரிவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஒரே ஆண்டில் 47 லட்சம் பயணிகள் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து பயணித்துள்ளனர். ₹138 கோடி வருவாயுடன் அதிக வருவாய் ஈட்டிய நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரும்பு தகடுகள் திருட்டு; 3 பேர் கைது
தூத்துக்குடி, செப்.12- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பகுதியில், கன்வேயர் சரிவர இயங்குவதற்கு உதவியாக 60 கிலோ எடையுள்ள இரும்புத் தகடுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 தகடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அனல் மின் நிலைய நிலக்கரி பிரிவு முதன்மை இளநிலைப் பொறியாளர் சந்திரசேகரன் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்தனர். விசாரணையில், நிலக்கரி தளத்தில் வேலை பார்த்த கோரம்பள்ளம் அய்யனடைப்பைச் சேர்ந்த செல்வகுமார் (33), கோயில்பிள்ளை நகரைச் சேர்ந்த முனியாண்டி (46), கதிரேசன் நகர் முருகன் (31) ஆகியோர் இத்திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், அவர்கள் 3 பேரும் மீண்டும் இரும்புத் தகடுகளைத் திருட முயன்றனராம். அப்போது, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மூவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூவரையும் போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.