கிருஷ்ணகிரி, ஜன. 7- ஓசூர் விரைவு பேருந்து பணிமனையில் ஒப்பந்தத்திலுள்ள சட்டப்படியான விடுப்பு எடுக்க தொழிலாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என அரசு விரைவு பேருந்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் பேரவைக் கூட்டம் ஓசூரில் பொதுச் செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு விரைவு பேருந்து ஓசூர் பணிமனையில் 200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நீண்டகாலமாக பழுது பார்க்காமல் உள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களை உடனடியாக பழுது நீக்கி தொழிலாளர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், சேறும் சகதியுமாக மழை நீர் தேங்கி நிற்கும் பணிமனையை சீரமைத்து கொடுக்க வேண்டும், ஒப்பந்தத்தில் உள்ளபடி தொழிலாளர்கள் சட்டப்படியான விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும், சுழல் முறையில் பணி செய்யும் முறையை நிர்வாகம் முறையாக அமல்படுத்த வேண்டும், இரட்டிப்பு பணி செய்ய தொழிலாளர்களை நிர்பந்திக்க கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைப் பொதுச் செயலாளர் முருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்டப் பொருளாளர் பீட்டர், சங்கத் தலைவர் தியாகராஜன், செயலாளர் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய தலைவராக விவேகானந்தன், செயலாளராக குமார், பொருளாளராக தங்கவேல் உள்ளிட்ட 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.