சிதம்பரம், ஆக 25 - சிதம்பரம் அருகே தோப்பிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி அன்பழகன். இவர் தனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தனது பெயர் மாறுதலுக்காக அவர் கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை அணுகிய போது அன்பழகனிடம் ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால் தான் பெயர் மாறுதல் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். பணம் கொடுக்க விரும்பாத விவசாயி அன்பழகன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை அன்பழகன் பார்த்தசாரதியிடம் கொடுக்கும் போது, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அதன்பிறகு செய்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். கடலூர் விஜயலட்சுமி நகரில் உள்ள அவரது வீட்டிலும் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.