தஞ்சாவூர் மாவட்டத்தில் 95.92 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி
தஞ்சாவூர், ஏப்.29-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 95.92 சதவிகித தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 18 ஆவது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.சாந்தா கூறியதாவது: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 405 பள்ளிகளைச் சேர்ந்த 32,271 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 30,953 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 95.92 சதவிகிதம் தேர்ச்சி விழுக்காட்டினை இம்மாவட்டம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 94.5 சதவிகிதம் பெற்று மாநில அளவில் 21 ஆவது இடத்தில் தஞ்சாவூர் மாவட்டம் இருந்தது. நடப்பாண்டு 95.92 சதவிகிதம் பெற்று மாநில அளவில் 18 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 405 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 87 அரசு பள்ளிகள் உள்பட 182 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி விழுக்காட்டு பெற்றுள்ளது என்றார். மாவட்டத்தில் 210 அரசுப் பள்ளிகள் உள்ளது. இவை பெரும்பாலும் கிராமப்புறங்களில் தான் உள்ளது. இந்த பள்ளிகளில் படித்த 12,394 மாணவ, மாணவிகளில் 11,703 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தியுள்ளனர்.அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் உள்ள 94 மெட்ரிக் பள்ளிகள் மூலமாக 7,666 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி 7,592 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், 10 ஆதிதிராவிட பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய 507 மாணவ, மாணவிகளில் 456 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு மாநகராட்சி பள்ளிகளில் தேர்வு எழுதிய 87 பேரில், 81 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு நகராட்சி பள்ளி மூலம் தேர்வு எழுதிய 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும், 35 உதவி பெறும் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய 6381 பேரில், 5947 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 20 பகுதி உதவி பெறும் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய 3495 பேரில் 3453 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் 23 சுயநிதி பள்ளிகள் மூலமாக 1,665 பேர் தேர்வு எழுதியதில் 1,651 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூகநலத்துறை சார்பில் செயல்படும் இரு பள்ளிகளில் 25 பேர் தேர்வு எழுதியதில் 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும், இரண்டு ஓரியண்டல் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய 28 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் செயல்படும் பள்ளிகளில் நடப்பாண்டு அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொத்தடிமையாக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு
தஞ்சாவூர், ஏப்.29-ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் சிவன் கோயில் பகுதியில் சிறுவன் கொத்தடிமையாக ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு ஏப்.26 ஆம் தேதி புகார் வந்தது. இதன்பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், சத்தியராஜ், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா. நடராஜன், ஒரத்தநாடு வட்டாட்சியர் அருள்ராஜ், மண்டலத் துணை வட்டாட்சியர் அகத்தியன் உள்ளிட்டோர் சென்று விசாரித்தனர்.இதில் அச்சிறுவன் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள சேந்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் விஜயகுமார்(10) என்பதும், ஓராண்டுக்கு முன்பு அண்ணாமலை இறந்துவிட்டதும் தெரிய வந்தது. எனவே, விஜயகுமாரை ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள அடிச்சிக்குளத்தைச் சேர்ந்த கே.ஜெயக்குமாரிடம் (39) அவரது தாய் லெட்சுமி வேலைக்கு அனுப்பினார். இதற்காக லெட்சுமியிடம் ரூ.10,000 வழங்கிய ஜெயக்குமார், பின்னர் விஜயகுமாரிடம் 120 ஆடுகளைக் கொடுத்து மேய்க்குமாறு கூறினார். ஆனால், ஓராண்டாக விடுப்பும் கொடுக்காமல், நல்ல உணவும், தூங்கு வதற்கு இடமும் வழங்காமல் விஜயகுமார் கொத்தடிமை போல நடத்தப்பட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, விஜயகுமாரை மீட்ட அலுவலர்கள் தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி.சுரேஷிடம் ஒப்படைத்தனர். இவருக்குக் கோட்டாட்சியர் விடுதலைச் சான்றும், ரூ. 20,000 உடனடி நிவாரணமும் வழங்கினார். பின்னர், விஜயகுமார் குழந்தைகள் நலக் குழுமம் மூலம் அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே, இதுகுறித்து பாப்பாநாடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.
வேட்டங்குடி பகுதியில் சவுடு மண் கடத்தல் அதிகரிப்பு
சீர்காழி, ஏப்.29-கொள்ளிடம் அருகே வேட்டங்குடி பகுதியில் சவுடு மண் கடத்தலை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக அனுமதியின்றி சவுடு மண் எடுக்கப்பட்டு வெளியூர்களுக்கு கடத்திச் செல்லப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வேட்டங்குடி கிராமத்தைச் சுற்றியுள்ள 4 இடங்களில் தனியார் இடங்களிலிருந்து சவுடு மண் எடுக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.இந்த சவுடு மண்ணை வெளி மாவட்ட ங்கள் மற்றும் நகர் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று ஆற்று மணல் என்று சொல்லியும் அதிக விலைக்கு இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுகின்றன. உரிய அனுமதியின்றியும் அதிக ஆழத்திற்கும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சவுடு மண் எடுத்து விற்று வருகின்றனர். வேட்டங்குடி கிராமத்தை ஒட்டியுள்ள ஆலங்காடு என்ற இடத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அதலபாதாளத்திற்கு பள்ளம் தோண்டி சட்ட விதிக்குப் புறம்பாக மணல் எடுத்து வந்து தனியாருக்குச் சொந்தமான ஒரு சவுடு மண் குவாரியை அதிகாரிகள் சோதனை செய்து கடந்த வருடம் அந்த குவாரிக்கு தடை விதித்தனர். அதே போல் விதிக்குப் புறம்பாக அப்பகுதியில் சவுடு மண் எடுப்பதையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.