தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்கதையாகி வருகின்றன. அனுதினமும் நடத்தப்படும் வன்முறைகள் குறித்து அடுக்கடுக்கான புகார்கள் மீது அரசும், காவல்துறையும் மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தில் கடைசி வரையில் காவல்துறை உண்மையை மூடி மறைக்கவே முயற்சித்தது அறிந்ததே. அரசின் அலட்சியமும், குற்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவான காவல்துறையின் போக்கினால் தான் இத்தகைய கொடுமைகள் தொடர்கதையாகி வருகின்றன.
பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை
இதன் தொடர்ச்சியாக பெரம்பலூரில் வேலை கேட்டு வந்த இளம்பெண் களை லாட்ஜூக்கு அழைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வைத்துஅதிமுக எம்.எல்.ஏ.வின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய ஆடியோடேப் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளிவந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து வழக்கறிஞர் ஒருவரும் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்டஇளம் பெண்கள் பாலியல் வன்முறைக்குஉள்ளாக்கப்பட்டு, நீண்ட, நெடிய மக்கள் போராட்டத்திற்கு பிறகு சிபிஐ-க்குமாற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், ஆளும்கட்சியினரால் இதேபோன்ற சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்திலும் நடந்துள் ளது, அதிமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதுதெள்ளத் தெளிவாகியுள்ளது.
உயர்நீதிமன்ற கண்காணிப்பில் நேரடி விசாரணை
பெரம்பலூரில் வெளியாகியுள்ள பாலியல் வன்முறை ஆடியோ உரையாடல் குறித்து தீர விசாரிக்க வேண்டுமெனவும், பாலியல் வன்முறை செய்தவர்களை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள் ளதால் இப்புகாரை நேர்மையாக விசாரிப்பதற்கு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் நேரடி விசாரணை நடைபெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.