தருமபுரி, டிச.26- பாலக்கோடு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பயன்பாட் டுக்கு கொண்டு வராத பல்நோக்கு சமுதாயக் கூடங்கள் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிற தென, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தில் மொத்தம் 32 ஊராட்சிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இப்பகுதி மக்கள் திரு மணம், வளைகாப்பு, காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சி களை நடத்துவதற்காக சென்னப்பன் கொட்டாய், கடத்தி கொள்மேடு, கரிகுட்டனூர், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட 18 கிராமங்களில், கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தலா ரூ.80 லட்சம் மதிப் பீட்டில் பல்நோக்கு சமுதாயக்கூடம் மற்றும் சமையல் கூடங்கள் கட்டப்பட்டன. இவற்றில் கரகூர், ஆமேதன அள்ளி, தொட்டபடகாண்டஅள்ளி ஆகிய 3 இடங்களில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடங்களில் மின்இணைப்பு, ஆழ்துளை கிணறு ஆகியவை உள்ளன. சென்னப்பன் கொட்டாய், கடத்திகொள்மேடு, கரிகுட்டனூர், கரகத அள்ளி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடங்களில் மின் இணைப்பு மட்டும் உள்ளது. இருப்பினும் இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மற்ற சமுதாயக் கூடங்களில் மின் இணைப்பு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகிய வசதிகள் செய்யப்படவில்லை. அடிப்படை வசதி கள்கூட இல்லாததால் சமுதாயக்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பாலக்கோடு ஒன்றியத்தில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக கட்டப்பட்ட சமுதாயக் கூடங்களில் 10க்கும் மேற்பட்டவை, அடிப்படை வசதிகள் இல்லாமல் உள் ளன. இவற்றில் மின் இணைப்பு, ஆழ்துளை கிணறு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் இந்த சமு தாயக் கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுக ளாகியும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடப்ப தால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி குடி, சூதாட்டம் போன்றவை அரங்கேறி வருகின்றன. மேலும், பல சமுதாயக் கூடங்கள் சேதமடைந்துள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து, பல் நோக்கு சமுதாயக் கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.