districts

சென்னை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு: விண்ணப்பம் வரவேற்பு

சென்னை, நவ.3- சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரி வித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் வடசென்னை மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டி, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களில் மாற்றுத்திறனாளிகள் நல பிரதிநிதி களான பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், கை, கால்கள் பாதிக்கப்பட்டோர், மன வளர்ச்சி குன்றியோர், புற உலகு சிந்தனையற்றோர், பல்வகை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், வடசென்னை, தொலைப்பேசி எண் -044-29993612 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

28 மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி: தடுத்து நிறுத்தியது சுங்கத்துறை

சென்னை,நவ.3- சென்னையில் துறைமுகத்தில், எருமை மாட்டுக்கறி என கூறி, 28 மெட்ரிக் டன் காளை மாட்டுக் கறியை ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததை தொடர்ந்து மாட்டிறைச்சி ஏற்றுமதியை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடை துறை சான்று அளித்திருந்தது. சந்தேகத்தின் பேரில், இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து, தவறான தகவலை கூறி, ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாக, தில்லியை சேர்ந்த யூனிவர்சல் புட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது சுங்க வரி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, யூனி வர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன மேலாளர் முகமது காலித் ஆலம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடு விக்கப்பட்டுள்ளார். யூனிவர்சல் புட் எக்ஸ்போர்ட்ஸ் நிறு வனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலை யில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

1330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு  ரூ. 15 ஆயிரம்

ராணிப்பேட்டை, அக்.3 –  உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவர்கள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டிற்கு ராணிப்பேட்டை மாவட்ட அளவில் அனைத்துப் பள்ளிகளில் (அரசு /தனியார் நிதியுதவி பதின்மப் பள்ளிகள்) (1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய) பயின்று வரும் மாணவர்களுக்கு 1330 குறட்பாக்கள், ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்கள் இருத்தல் வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறள் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப் பெயர்கள் உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கொள்ளப்பெறும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு ராணிப்பேட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படும்.  ஏற்கெனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. திருக்குறள் முற்றோதலில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0416-2256166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முழுமையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்களுக்கு நவம்பர் 30ஆம் நாளுக்குள் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், 4ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேலூரில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாக அனுப்பி வைத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, நவ. 3- சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் உள்ள இணையதளத்திற்கு சனிக்கிழமை இரவு இமெயிலில் தகவல் வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இமெயில் மிரட்டலில் குறிப்பிட்ட விமானத்திற்கோ அல்லது விமான நிலையத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு என்று குறிப்பிடாமல் இருந்ததால் விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாக பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி, ஓடுபாதை, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், பயணிகள் புறப்பாடு, சரக்கு பார்சல்களை விமானங்களில் ஏற்றும் பகுதி ஆகிய இடங்களில் ஞாயிறு காலை வரை விடிய, விடிய சோதனை நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் வந்த இமெயில் முகவரியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் வெடிகுண்டு புரளிகள் இல்லாத நிலையில் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் கடை உரிமையாளர் பெயரில் ரூ.22 கோடி மோசடி!

சென்னை,நவ.3- ஜி.எஸ்.டி நிலுவை தொகையாக ரூ.22 கோடியே 29 லட்சம் கட்ட கோரி நோட்டீஸ் வந்ததாக எலக்ட்ரிக் கடை நடத்தும் வாலிபர் ஒருவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (30). இவர் செவ்வாய்பேட்டை சிடிஎச் சாலையில் எலக்ட்ரிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு சிந்தாதிரிப்பேட்டை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து வந்த நோட்டீஸில் மகேந்திர குமார் 22 கோடியே 29 லட்சத்து 29 ஆயிரத்து 722 ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை யாக கட்ட வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேந்திர குமார் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர், வழக்கறி ஞர் மூலம் ஜி.எஸ்.டி கணக்கில் வழங்கப்பட்டிருந்த விவரங்களை சேகரித்தார். அதில் பான் கார்டு எண் மகேந்திர குமார் உடையதாகவும், வங்கிக் கணக்கு எண் மற்றோறு நபரினுடையதாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் வாலிபர் சங்கத்தினர் தூய்மைப் பணி

திருத்துறைப்பூண்டி, நவ.3 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட குழு சார்பாக தூய்மைப் பணி இயக்கம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய மூன்று மையங்களில் தீபாவளி சிறப்பு தூய்மைப் பணி இயக்கம் நடைபெற்றது. ஞாயிறன்று திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணி இயக்கத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், ஒன்றிய நகர நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், நகரச் செயலாளர் கே.கோபு, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், நகரக் குழு உறுப்பினர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தீபாவளியையொட்டி சேர்ந்த அனைத்து குப்பைகளும்  தூய்மைப்படுத்தப்பட்டன. வாலிபர் சங்கத்தின் இம்முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.