விழுப்புரம், ஜூலை.9-
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மே 13 ஆம் விற்கப்பட்ட, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை குடித்த 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக சாராய வியா பாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்கிற பிரேம்குமார், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு என்கிற வெங்கடாஜலபதி ஆகிய 11 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் 11 பேர் மீதும் மரக்காணம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சிபிசிஐடி காவல்துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைதான சாராய வியா பாரிகள் அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி ஆகிய 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இதனையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு சிபிசிஐடி காவல்துறையினர் பரிந்துரை செய்தனர். மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவின்பேரில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் 5 பேருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.