districts

img

கனிமவளம் கொள்ளை: அதிகாரிகள் விசாரணை

ஆம்பூர், ஆக. 7- வாணியம்பாடி அருகே நடைபெற்றதாக கூறப்படும் கனிமவள கொள்ளை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் மேல்குப்பம், கொல்லகுப்பம், இளைய நகரம், காட்டு வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளம், வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் கடந்த பல ஆண்டுகளாக அனுமதியின்றி ஜே.சி.பி, டிப்பர் லாரிகள் மூலம் மண், மணல், மொரம்பு ஆகியவற்றை கடத்தி விற்று வருவதாகவும், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் ஆகியவற்றை அழித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் வனப்பகுதியில் நடப்பட்ட 5 ஆயிரம் மரக்கன்றுகளை அழித்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதனடிப்படையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காட்டு வெங்கடாபுரம், கொல்லகுப்பம் இளைய நகரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அனுமதி பெற்ற இடத்திலும் கூட அளவுக்கு அதிகமான ஆழம் தோண்டி மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அனுமதியின்றி மண், மணல் கொள்ளை நடைபெற்றுள்ளதும் தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டபோது, இளைய நகரம் கிராம நிர்வாக அலுவலர் சத்யா முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து கோட்டாட்சியர் நிர்வாக அலுவலரையும், அவரது உதவியாளரையும் எச்சரித்தார். இனிமேல் மண் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.