districts

img

குறவன் இன மக்கள் மீது தொடரும் தாக்குதல் காவல்துறையினர் மீது ஆட்சியரிடம் புகார்

கிருஷ்ணகிரி,ஜூலை 6-

     கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறவன்  இன மக்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்கல் மற்றும் பொய் வழக்குகள் போடு வதை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

     கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம்,  ராயக்கோட்டை பகுதி பாஞ்சாலி நகரில் குறவர் இனத்தைச் சேர்ந்தவர் 33 வயது சந்தோஷ்.  இவர் பல ஆண்டுகளாக நான்கு சக்கர வாகனத்தில் பழைய இரும்பு மற்றும் அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்களையும் வாங்கி அதை மொத்தமாக விற்பனை செய்து  அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

   கடந்த 21 ஆம் தேதி ராயக் கோட்டை மற்றும் உத்தனப்பள்ளி பகுதியில் வியாபாரம் செய்து கொண்டி ருந்த போது யாரோ ஒருவர் கைப்பேசி யில் அழைத்து பழைய இரும்பு, அலுமினியம் பாத்திரங்கள் இருப்ப தாக தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சந்தோஷ் அங்கு சென்றுள்ளார்.  

   அப்போது, உத்தனப்பள்ளி காவலர் ஒருவர் சந்தோஷ் வண்டியை நிறுத்தி விசாரித்த போது நீ குறவன் இனத்தை சேர்ந்தவரா? எங்கு திருடச் செல்கிறாய் என்று மிரட்டியுள்ளார்.

    இந்த தகவலை தனது உறவினரிடம் செல்போனில் சந்தோஷ் கூறியதும்,  செல்போனை பிடுங்கி கொண்ட காவலர்கள் சாதிப் பெயரை சொல்லி தகாதவார்த்தைகளால் திட்டியதுடன் கடுமையாக தாக்கியுள்ளனர்.

   பிறகு, உன்னை விசாரிக்க வேண் டும் என்று கூறி வெள்ளிச்சந்தைக்கு அழைத்துச் சென்றுள்ளார். விடியற்காலையில் உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு  அழைத்துச் சென்றுள்ளனர். இந்த தகவல்களை தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, சந்தோஷின் அம்மா  ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் குமுதா உள்ளிட்ட மூன்று பேர் விசாரணை எனும் பெயரில் அடித்து உதைத்து மிரட்டியதும்,  வயர்களை திருடியதாக ஒத்துக்கொண்டதால் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்தது. ராயக்கோட்டை அரசு மதுபான கடை யில் 4 மாதங்களுக்கு முன்பு நடந்த  திருட்டை சந்தோஷ் தான் செய்ததாக  எழுதி கையொப்பம் இட வைத்துள்ள னர்.  

     பிறகு, பிணையில் எடுத்துள்ளனர். வெளியில் வந்ததும், ஒரு பெட்டி கேஸ் உள்ளது என்று உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மீண்டும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இந்த நிலையில், குறவன் பழங்குடி  மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வேலு தலைமையில் மாவட்ட ஆட்சியர் சரயுவை சந்தித்து  இது குறித்து புகார் மனு அளித்தனர்.சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சக்தி,வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அந்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறையினர் குறவன் இன மக்களை தொடர்ந்து தாக்குவதும், பொய் வழக்குகள் போடுவது அதிகரித்து வருகிறது. இதன்  உச்சம்தான் சந்தோஷ் மீது பொய் வழக்குகள். கொடூர செயலில் ஈடுபட்ட உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.