ஆருத்ரா தரிசனம் கடலூருக்கு ஜன.6 உள்ளூர் விடுமுறை
கடலூர்,ஜன.4- கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரம் நடராஜர் திருக்கோவில ஆருத்ரா தரிசனம் நடைபெறும் வெள்ளியன்று (ஜன 6) கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 28 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி வழிப்பறி
சென்னை,ஜன.4- சென்னை ஆவடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் கார்த்தியை கல்லால் தாக்கி ரூ.1.54 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி பணத்தை பறித்து சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயி வீட்டில் நகை,பணம் கொள்ளை
ஆற்காடு, ஜன.4- ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த கனியன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 50), விவசாயி. இவர் செவ்வாயன்று காலை வீட்டிலிருந்து மாடுகளை தனது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மாலை 5 மணி அளவில் ராஜம் மாள் விவசாய நிலத்தி லிருந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ வில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 15 சவரன் நகைகள் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு
வேலூர்,ஜன.4- வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. ஆண் பெண் இருபாலரும் பங்கேற்றிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் (Www.sdat.tn.gov.in) வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்திட கடைசி நாள் 07.01.2023 ஆகும். இப்போட்டிகளில் நேரிடையாக பங்கேற்க இயலாது. ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் துவங்கி நடத்தப்படவுள்ள இப்போட்டிகளில் பதக்கம் பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், தெரிவித்துள்ளார்.
பாம்பு கடித்து தொழிலாளி சாவு
போளூர், ஜன.4- போளூர் அருகே பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (வயது 40), கூலி தொழிலாளி. இவர் அதே ஊரைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் ஜன 1-ந் தேதி கரும்பு வெட்டி கொண்டிருந்த போது பாம்பு கடித்து விட்டது. சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று உயிரிழந்தார்.
மின் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர்,ஜன.4- வல்லூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.