2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு
வேலூர்,பிப்.6- வேலூர் காவல் சரகத்திற்குட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவ ர்கள் பங்கேற்ற 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் 1,059 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதிதேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் தொடங்கியது. இந்த தேர்வு 11 ஆம் தேதி வரை நடக்கிறது.இதில் முதற் கட்ட உடற்தகுதி தேர்வு 8ஆம்தேதி வரையும், 2 ஆம் கட்ட தேர்வு 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையும் நடக்கிறது. ஒரு நாளைக்கு 400 பேருக்கு உடற்தகுதி தேர் வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவலர் தேர்வு முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இதையொட்டி நேதாஜி மைதானத்தில் பேரிகார்டுகள் அமைத்து முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.
கரும்பு எடுத்து செல்ல தடையில்லா சான்று: ஆட்சியர்
திருவண்ணாமலை,பிப்.6- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறைப்பட்டிலுள்ள கள்ளக்குறிச்சி -1 கூட்டுறவு சர்க்கரை ஆலை 2021-22 சிறப்பு மற்றும் 2022-23 பிரதம அரவைப் பருவத்திற்கு 13200 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு இந்த அரவைப் பருவத்திற்கு 5,03,000 மெ.டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு, ஆலையின் தொடர் அரவை நடைபெற்று வருகிறது. ஆலையின் விவகார எல்லைப்பகுதிகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கரும்பை மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு எடுத்துச் செல்ல தடை செய்து சர்க்கரைத்துறை ஆணை யர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி இடைத்தரகர் கள் மூலம் ஆலையின் விவகார எல்லைப் பகுதிகளிலி ருந்து முறையற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கரும்பு எடுத்து செல்லப்படுகிறது. மேற்காணும் செயல் கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தை மீறுவதாகவும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைப்பகுதிகளில் அரவைப்பருவத்திற்கு பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கரும்பினை மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்து செல்வதால் அரசின் பங்களிப்புடன் கூடிய ஆலையான கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அரவைத்திறன் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். மேற்காணும் கரும்பினை இதர சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்து செல்ல ஆலை நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்றுச் செல்லவேண்டும். எனவே முறையற்ற வகையில் இடைத்தரகர்கள் மூலம், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கரும்பை சட்டத்திற்கு புறம்பாக எடுத்து செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு மீறும் பட்சத்தில் காவல் துறையின் மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆட்சியர்கள் பொறுப்பேற்பு
ராணிப்பேட்டை,பிப்.6- ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக வளர்மதி பொறுப்பேற்றுக்கொண்டார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராணிப்பேட்டைக்கு புதிய ஆட்சியராக வளர்மதி நியமிக்கப்பட்டார். ஆட்சிய ராக பொறுப்பேற்றுக்கொண்ட அவரிடம் திருப்பத்தூருக்கு மாறுதலாகி செல்லும் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்து, பூங்கொத்து வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 12ஆவது புதிய ஆட்சி யராக தீபக் ஜேக்கப் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானுரெட்டி உடனிருந்தார்.
அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கிருஷ்ணகிரி,பிப்.6- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து அறிவியல் விஞ்ஞானிகளான கிருஷ்ணம் பிரசாத், ரமணா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் முன்னிலையில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் விஞ்ஞானிகளுடன் தமிழ் துறைக்குச் சென்று அனைவரும் குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். தமிழ்த் துறையில் ஐவகை நிலங்கள், கைவினைப் பொருட்கள், மூலிகைகள், கீரை வகைகள், தஞ்சை பெரிய கோவில், பேசும் ஓவியங்கள் போன்றவற்றை வரிசையாக பார்த்து மாணவர்களிடையே சில வினாக்களை எழுப்பி அவர்களின் திறனை கேட்டார்கள்.