தூத்துக்குடி, டிச. 6 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கன மழை காரணமாக விவசாயம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு போல் மீண்டும் தற்போது கோமாரி நோய் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரம், கோவில்பட்டி தாலுகா பகுதிகளில் அதிகளவில் கால் நடைகளை தாக்குவதாக தெரிகிறது. இந்நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள், கால் நடை உரிமையாளர்கள் பெரிதும் சிறமத்திற்கு ஆளாகியுள்ளனர் . கோமாரி நோய் தாக்குதல் காரணமாக மாடு மற்றும் கன்றுகள் உணவு உட்கொள்ள முடியாமல், காலில் புண் ஏற்படுவதால் நடக்க அடி எடுத்து கூட வைக்க முடியாமல் சிரமப்படுகின்றன. இதன் காரணமாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கால்நடைகளுக்கு பெருமளவில் கோமாரி நோய் பரவி வருகின்றது. குறிப்பாக கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் பெருமளவில் கால் நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு சார்பில் தடுப்பூசி போடப்படவில்லை ஆகையால் கால்நடைகள் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பால் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாவட்டத்தில் கோமாரி நோய்க்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட தலைவர் மணி, வி.தொ.ச மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் ராமசுப்பு, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் லிங்கம், நியூட்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.