districts

மதுரை முக்கிய செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தென்காசி ,செப். 29 தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவுடையானூர் அருளப்பர் மேல்நிலைப்பள்ளி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த சின்னகுமார் பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த ஆறுமுக நயினார் என்பவரின் மகன் ஆனந்த செல்வன் (25)  கைது செய்யப்பட்டார்.   காவல் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன்  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 84,000 மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.    

செங்கோட்டை நூலகத்தில் டெட் இலவச மாதிரி தேர்வு

தென்காசி, செப். 29 செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும் தென்காசி வெற்றி ஐஏஎஸ் அகாடமியும் இணைந்து  ஆசிரியர் தகுதி தேர்வுக்கான  தாள் -1 மற்றும் தாள் -2  மாதிரி தேர்வு நடத்த ஏற்பாடு செய்துள்ளன.  02-10-22 ஞாயிறு அன்று காலை 9.30 மணி முதல் 1  மணிவரை  செங்கோட்டை நூலகத்தில்  நடை பெறுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவ ரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 9486984369 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மதுபானக் கடைகள் மூடல் 

 தென்காசி, செப். 29 காந்தி ஜெயந்தி  (02.10.2022) மற்றும் மிலாடி நபி  (09.10.2022) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள்மேற்கண்ட தினத்தில் மட்டும் மூடப்பட்டடிருக்கும். அன்றையதினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர்  ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

எலி மருந்தை தின்ற  3 வயது குழந்தை சாவு

திருநெல்வேலி, செப். 29- நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் சர்ச் தெருவை சேர்ந்தவர் வேதநாய கம் அலெக்ஸ் மணி. விவசாயி. இவரது மனைவி சுகிர்தா. இவர்களது 3 வயது பெண் குழந்தை ஷாம் லிரின். இவர்க ளின் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதற்காக எலி மருந்து வாங்கி வீட்டில் வைத்துள்ளனர். இதனை பார்த்த ஷாம் லிரின் தின்பண்டம் என நினைத்து  அதை எடுத்து தின்றுள்ளார். இதை அவளது பெற்றோர்  கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.  இதனிடையே அவள் திடீரென வாந்தி எடுத்ததை பார்த்த பெற்றோர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள  தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை திடீரென ஷாம் லிரின் மயங்கி விழுந்தாள். உடனே  அவளை பெற்றோர் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியி லேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து மானூர் காவல் துறையினர்  விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மூலைக்கரைப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

திருநெல்வேலி, செப் .29- மூலைக்கரைப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள். நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்க ளாக மர்ம காய்ச்சல் பரவியது. இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். சுகாதார துறையினரும் கிராமம், கிராமமாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.  மூலைக்கரைப்பட்டி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 40), டெய்லர். இவரது மூத்த மகள் தங்கவேணி (12). இவள் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 3 நாட்களாக தங்கவேணி காய்ச்சல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டாள். பள்ளிக்கும் செல்லவில்லை.  இதையடுத்து பெற்றோர், அவளை மூலைக்கரைப் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் காய்ச்சல் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தங்கவேணி  பரிதாபமாக உயிரிழந்தாள். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி பலி

தூத்துக்குடி, செப். 29 கோவில்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி தனியார் நிறுவன வாட்ச்மேன் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, முத்து மாரி யம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர்  சுப்பையா  மகன் மாரியப்பன் (62). இவர், இலுப்பையூரணி அருகில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை  பார்த்து வந்தார். புதன் மாலை தன்னுடைய வீட்டில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு  சென்று கொண்டிருந்தார். வேலாயுதபுரம்  அருகில்  ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அவ்வழியே வந்த ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி  அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரசு இராஜாஜி மருத்துவமனை விரிவாக்க கட்டிடத்திற்கு  குடிநீர் விநியோகம் துவக்கம்

மதுரை, செப்.29-  மதுரை  அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு மதுரை மாநகராட்சியின் மூலமாக ஏற்கனவே குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது . தற்போது மருத்துவமனை கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. கூடுதல் கட்டிடத்திற்கு வரும் பொதுமக்கள்,  உள் மற்றும் வெளிநோயாளிகள் , பணியாளர்கள் , அலு வலர்கள் அனைவருக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் மதுரை மாநகராட்சி இராஜாஜி பூங்கா அருகில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியிலி ருந்து  செவ்வாயன்று  முதல் குடிநீர் வழங்கப்படுகிறது.  இராஜாஜி பூங்கா அருகில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து அரசு இராசாசி மருத்துவமனை கூடுதல் கட்டிடத்திற்கு ரூ .16.50 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1200 மீட்டர் நீளத்திற்கு 90 எம்.எம் . சி.ஐ.குழாய்கள் பதிக்கப் பட்டு குடிநீர் விநியோகம் செய்வதற்கு பணிகள் முடிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு இராசாசி மருத்துவ மனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது . மேலும் குடிநீர் விநியோகம் முறை யாக செல்வதற்கு 90 எம்.எம் . விட்டமுள்ள வால்வு ஒன்றும், குடிநீர் மீட்டர் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது இதனை மேயர் வ. இந்திராணி தொடங்கி வைத்தார் . இந்நிகழ்வில் ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் தி.நாக ராஜன், நகரப்பொறியாளர்  லெட்சுமணன், மண்டலத் தலை வர் சரவணபுவனேஸ்வரி, அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவ அலுவலர் மரு.ரவீந்திரன் உதவிப்பொறியாளர் சந்தனம்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூலி உயர்வு-தீபாவளி போனஸ் வழங்க அப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை

மதுரை, செப் 29-   பல வருடங்களாக உயர்த்தப்படாமல் உள்ள  கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி  மதுரை மாவட்ட சிஐடியு அப்பளத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அப்பள வியா பாரிகள் மற்றும் தயாரிப்பாளர்களிடம்  மனு அளிக்கப் பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்குப்பின்  விலைவாசி மற்றும்  வீட்டு வரி, மின் கட்டணம் , கேஸ் விலை உயர்வு,  அனைத்து உணவுப் பொருட்களும் விலை உயர்ந்து வரும் நிலையில் அப்பளத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை.  தற்போது  விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடி யினை சந்தித்து  வருகிறார்கள். இதனால் கடன் சுமைக்கு அப்பளத்தொழிலாளர்கள் தள்ளக் கூடிய சூழ்நிலை உள்ளது.   எனவே அப்பள தயாரிப்பாளர்கள் மற்றும்  வியாபாரி கள் அப்பளத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வுக்கான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு போனஸ் உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 28 புதனன்று சிஐடியு அப்பள தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட செயலாளர்  எம்.பாலமுருகன். அப்பள தயாரிப்பாளர் கள் மற்றும் வியாபாரிகளிடம் மனு அளித்தார்.

கடன் பிரச்சனையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

தூத்துக்குடி, செப். 29 தூத்துக்குடி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தியில் தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள பட்டாண்டி விளை கிராமம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் மகன் ரமேஷ் (43). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரிடம் கடன் வாங்கினாராம். ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி அளித்தாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த ரமேஷ் புதனன்று பெயிண்டுடன் கலக்கும் தின்னரை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டாராம். இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாநகராட்சி  பொறியாளர் இடமாற்றம்

திருநெல்வேலி, செப். 29- நெல்லை மாநகராட்சி பொறியாளர் அசோகன், தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப் பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக மதுரை மாநகராட்சி  பொறியாளர் லட்சுமணன், நெல்லை மாநகர பொறியாள ராக நியமிக்கப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளராக மாற்றப்பட்டு உள்ளார்.

குமரியில் 3 இடங்களில்  மனிதச் சங்கிலி  சிபிஎம், சிபிஐ, விசிக முடிவு

நாகர்கோவில், செப்.29- கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கம் நடத்துவது குறித்து சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக் குழு அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, நிர்வாகிகள் ஏ.வி.பெல்லார்மின், எம்.ஏ.உசேன், என்.முருகேசன், என்.எஸ். கண்ணன் கலந்துகொண்டனர். விசிக சார்பில் ஏ.எல். காலித், எஸ்.இ.மேசியா, வி.பி.சத்தியதாஸ், ஞானதாஸ், சிபிஐ சார்பில் கே.நாகராஜன், தா.சுபாஷ் சந்திர போஸ், ஆர்.செல்வராணி ஆகியோர் பங்கேற்றனர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித் துறையில் அக்.2 மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலியில் பெருந்திரளான மக்கள் அணி வகுத்து கரம்கோர்க்க உள்ளனர்.

புதூர், நாகலாபுரம் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

தூத்துக்குடி, செப். 29 புதூர், மற்றும் நாகலாபுரம் பள்ளிகளில் மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டியை மார்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியருக்கு விலை யில்லா மிதிவண்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பி னர் மார்கண்டேயன் வழங்கினார். மாணவ- மாணவிக ளிடம் சட்டமன்ற உறுப்பினர் பாட புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்டு பதில் அளித்த மாணவ- மாணவிக ளுக்கு ஊக்கத்தொகை வழங்கி மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

காவலர் குழந்தைகள்  நல காப்பகம் திறப்பு

தூத்துக்குடி, செப். 29 காவலர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஆயுதப்படை காவலர்கள் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தனிப்பட்ட முயற்சியில் 3வது மைல் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர் குழந்தைகள் நல காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழந்தைகள் நல காப்பகத்தை வியாழனன்று மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆயுதப் படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெய ராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளர்கள் கணேச மணிகண்டன், ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்ட ஆயுதப்படை காவல் துறையினர் மற்றும் காவலர்கள் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் தொகுதியில்  ஒரு கோடி மரங்கள் நடும்  திட்டம் துவக்கம்

தூத்துக்குடி, செப். 29 விளாத்திகுளம் பேரூராட்சியில் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, விளாத்திகுளம் பேரூராட்சியில் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விளாத்தி குளம் பேரூராட்சி பொதுப்பணித்துறை பாசனக் பண்மாய் கரையில் 350- மரக்கன்றுகள் நடும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்கண்டேயன் முன்னிலையில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். நிகழ்வில் வனச்சரக அலுவலர் கவின் (வனவர்), பாண்டியராஜ்,  வைப்பார் உட்கோட்டம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்  ஸ்ரீராம்,  பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ்,  பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்ன மாரிமுத்து, அன்புராஜன், புதூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர், செப்.29- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அருணாசல பாண்டியன் (37).  இவர் தனது தாய் ஈஸ்வரியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரத்தில் தாய் என்றும் பாராமல் அவரைக் கொலை செய்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அருணாசலபாண்டியனை கைது செய்தனர். இந்த வழக்கானது,  திருவில்லிபுத்தூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி அருணாசலபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மனைப்பட்டா ,உதவித்தொகை வழங்கிடுக:  தேனி வட்டாட்சியரகத்தில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

தேனி ,செப்.29- வீட்டுமனைப் பட்டா ,தகுதி யுள்ள நபர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் செப்டம் பர் 28 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தேனி தாலுகாவுக்கு உட்பட்ட தப்புக்குண்டு , முத்துத்தேவன்பட்டி ,ரயில்வே புறம்போக்கு பகுதிகளில் மனு செய்த அனைவருக்கும்   வீட்டுமனை, வீட்டுமனை பட்டா  வழங்க வேண்டும் .மனு அளித்த தகுதியான நபர்களுக்கு முதியோர், விதவை உதவித்தொகை வழங்க வேண்டும் .மக்கள் கொடுத்து வரும்  மனுக்கள் மீது  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேனி வட்டாட்சி யர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு  மாவட்டக்குழு உறுப்பினர் டி நாகராஜ் தலைமை வகித்தார் .கிளைச் செயலாளர்கள்  நாகேந்திரன் ,அப்பாஸ் மந்திரி, கபார்கான், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .போராட் டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், தாலுகா செயலாளர் இ.தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர் டி ஜெய பாண்டி, தாலுகாக்குழு உறுப்பினர் கள் பொன்னுதுரை, மாதா,ம.காமத் துரை ,சரஸ்வதி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர்  போராட்டத்தில் ஈடு பட்ட தலைவர்களுடன்  தேனி வட் டாட்சியர் சரவண பாபு பேச்சு வார்த்தை நடத்தினார் .அப்போது  விரைவில் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார் .அதனைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர்.

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு வேலை வழங்கிடுக பரமக்குடியில் சிஐடியு ஊரக வளர்ச்சி - உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்

இராமநாதபுரம்,செப்.29-  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் 8 ஆண்டுகளாக டெங்கு தடுப்பு மற்றும் கொரோனா கால பணிகளை சிறப்பாக செய்த பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்/ இது தொடர்பாக 14-8-2022 இல் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் குறித்து விசாரித்து நகராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் இபி எஃப் பணம் பிடித்தது தொடர்பாக உடனே விசாரணை நடத்த வேண்டும். குடிநீர், டெண்டர் தொடர்பான மற்றும் தூய்மைப்பணி உள்ளிட்ட  முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என சங்கத்தின் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.  இது தொடர்பாக பரமக்குடி நகராட்சி முன்பாக சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். அய்யாத்துரை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட துணைச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


 

;