மதுரை, ஜூலை 3- 108 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும் பள்ளிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குலமங்கலம். இங்கு 1916-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி 108 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டுமென பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமது உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா ஞாயிறன்று நடைபெற்றது. நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா , ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர் தனபாலன் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.