districts

புதுவையில் தடுப்பூசி கட்டாய சட்டம் அமுல்

புதுச்சேரி, டிச.5-  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதுவையில் தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  புதுவை பொது சுகாதார சட்டம் 1973-ன் பிரிவு 54(1) விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.2 தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும். இது தொடர்பாக புதுச்சேரி சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறியதாவது:- கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இதை மீறுபவர்கள் சட்ட விதிகளின் படி தண்டிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் சுற்றி வருவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பொது இடங்களுக்கு வருபவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும். வெளியே நடமாடுபவர்களிடம் சான்றிதழ் உள்ளதா? என சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியே சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு  அவர்  கூறினார்.