பெரம்பலூர், அக்.10 - பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை கிராமத்தில் வசித்து வந்த சுதந்திர போராட்ட வீரர் தியாகி கிருஷ்ணசாமி வயது முதிர்வால் திங்கட்கிழமை இயற்கை எய்தினார். உலக நாடுகளின் சுதந்திர போராட்ட வரலாற்றில் இந்தியாவிற்கு தனி பெருமை உண்டு. இதில் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை வழிப் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்றபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்தும் காந்தி சென்ற பாதையை பின் தொடர்ந்து, அவரோடு அகிம்சை வழியில் நடந்த போராட்டங்களில் பங்கேற்று பலர் சிறை சென்றனர். அதேசமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஐஎன்ஏ எனப்படும் இந்திய ராணுவத்தை கட்டமைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட்டு விரட்ட நினைத்தபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சென்று அவரது படையில் சேர்ந்தவர்தான் தியாகி.கிருஷ்ணசாமி. 22.3.1924 அன்று பிறந்த தியாகி.கிருஷ்ணசாமி ரங்கூன் படை பிரிவில் 16 வயதில் சேர்ந்து பணியாற்றி, கொரில்லா படையின் முக்கிய தலைவராக விளங்கினார். ஆங்கிலேயர் களுக்கு எதிராக நடைபெற்ற போரின் காரணமாக, மலேசியா மற்றும் பர்மா ஆகிய நாடுகளின் சிறையில் அடைக்கப்பட்டு, இறுதியாக சிங்கப்பூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு மாநில அரசின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு நாட்டிற்காக பல தியாகங்களை செய்த சுதந்திர போராட்ட வீரர் தியாகி கிருஷ்ணசாமி திங்களன்று தனது 98-வது வயதில் இயற்கை எய்தினார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அன்னாரது உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி னார். தியாகிகளுக்கான ஈமச்சடங்கு நிதி தொகை ரூ.5 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் அவரது குடும்பத்தினர்களிடம் வழங்கினார். வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.