கள்ளக்குறிச்சி, டிச.6- குதிரைச்சந்தல் கிராமத்தில் சாதி ஆணவ படுகொலையால் உயிரிழந்த காதலர்களின் மரணத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி வட்டம், குதிரைசந்தல் கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த நிவேதா மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகியோர் 23.11.2021ல் சோமண்டார்குடி ஆற்றங்கரையோரம் உள்ள காட்டுபகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரின் உடலிலும் கடுமையான காயங்கள் இருந்ததால் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரி வித்து சாதி ஆதிக்க சக்தியினர் படு கொலையை செய்துள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, இப்படுகொலையை கண்டித்தும், கொலை செய்த குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திடவும், குற்ற வாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வலி யுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (டிச. 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னணியின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வி.ராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் இரா.பூமாலை, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அப்பாவு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் மு.தனபால், மக்கள் அதிகாரம் நிர்வாகி ஆ.ராமலிங்கம், ஆதி திராவிடர் கட்சி மாவட்ட செயலாளர் பெ.இளங்கோவன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் செ.பிரபு, சிபிஎம் வட்ட செயலாளர்கள் டி.மாரிமுத்து, ஜி.அருள்தாஸ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, செயலாளர் வி.ஏழுமலை, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பி.சின்னராசு, மாதர் சங்க நிர்வாகி வீ.சந்திரா, சிறுபான்மை நலக்குழு மாவட்ட தலைவர் அ.பா.பெரியசாமி, முன்னணி பொருளாளர் பி.தெய்வீகன், ஏ.நடேசன், கே.வேலாயுதம், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.