districts

img

மண்டைக்காடு அருகே பெட்ரோல் குண்டு வீச்சு அச்சுறுத்தல், வகுப்புவாத பதற்றம் ஏற்படுத்தும் முயற்சி

நாகர்கோவில், செப்.26- கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அச்சுறுத்தல் மற்றும் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெறும் முயற்சியாக கருதப்படு கிறது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக கைது செய்து சமூக நல்லிணக்கத்தை சிதைக்க முனைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ளது கருமன்கூடல். இப்பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (55). செப்.24 சனியன்று நள்ளிரவு 11 மணியளவில் இவரது வீட்டின் அருகில் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஒருவர் பெட்ரோல்  நிரப்பிய 2 பாட்டில்களில் தீயை பற்ற வைத்து கல்யாண சுந்தரத்தின் வீட்டின் மீது வீசினார். வீட்டின் முன் பகுதியில் நின்ற காரும், வீட்டுச்சுவுரை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளும் சேதம் அடைந்தன. வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் கல்யாணசுந்தரத்தின் வீட்டி லும், எதிர் வீட்டிலும் வைத்திருந்த சிசிடிவி காமிரா வில் முழுமையாக பதிவாகி உள்ளன. அந்த காட்சிகளில் எவ்வித பதற்றமும் இல்லாமல் இரண்டு பெட்ரோல் பாட்டில்களையும் லைட்டர் மூலம் பற்றவைத்து ஒருவர் தூக்கி வீசுவதும், கச்சிதமாக இதை செய்து முடித்தவுடன் சற்று தொலைவில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை கைகாட்டி அழைத்த படி ஓடுவதும் பதிவாகி உள்ளது. வன்முறையாளர்கள் வந்த நீலநிற வாகனத்தில் நம்பர் பலகை அகற்றப் பட்டிருந்தது.

சம்பவம் குறித்து கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் பேரில் மண்டைக்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடயவியல் வல்லுநர்கள் நேரில் வந்து  ஆய்வு செய்தனர். வீட்டிலிருந்து எரிந்த சைக்கிள் மற்றும் உடைந்த பாட்டில் சிதறல்களை காவல்துறையினர் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். கல்யாண சுந்தரத்தின் தொடர்பில் உள்ள நபர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் காவல் துறையினர் விசாரித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார். கல்யாணசுந்தரத்தை அவரது வீட்டில் ஞாயிறன்று சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, கல்யாணசுந்தரம் பாஜகவை சேர்ந்தவர் என தெரிவித்தார். ஆனால் எந்த கட்சியிலும் தான் உறுப்பி னராக இல்லை எனவும், அனைவரிடமும் நட்புடன் பழகுவதால் தன்மீது இப்படி ஒரு முத்திரை குத்தியது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். திங்களன்று அவரது வீட்டுக்கு சிபிஎம் மூத்த தலைவர் என்.முருகேசன், குருந்தன்கோடு வட்டார செயலாளர் ற்றி.ஜே.புஷ்பதாஸ் மற்றும் வட்டரக்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

சிபிஎம் வழக்கறிஞர் குழு

மண்டைக்காடு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வழங்கறிஞர்கள் சங்க (ஏஐஎல்யு) மாவட்ட பொதுச் செயலாளர் பி.பரம தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், ஏஐஎல்யு மாநில செயலாளர் அனந்தசேகர், ஏஐஎல்யு மாவட்ட செயலாளர் மரிய ஸ்டீபன், ற்றி.ஜே.புஸ்ப தாஸ், வி.என்.பிஜு, நந்தகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சிபிஎம் கண்டனம்

மண்டைக்காட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நன்கு பயிற்சி பெற்ற நபர்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட சதிச்செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும் குறியீடாக மண்டைக்காடை மாற்றும் முயற்சி நடந்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த காலத்தில் இங்கு உருவாக்கபட்ட பதற்றமும், வன்முறைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் மாவட்ட மக்களால் மறக்க முடியாதவை. அமைதியை விரும்பும் மாவட்ட மக்களிடையே மீண்டும் பிரிவினையைத் தூண்ட நடக்கும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிய மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முன்வர வேண்டும். மக்களிடையே வெறுப்பையும் பகைமையையும் தூண்டும் நடவடிக்கைகளை தடுக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்த வேண்டும் என அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

;