மேலூர், டிச.23 - மதுரை மேலூரில் வேதாந்தா நிறுவனத்தின் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய மூன்று நாள் நடைபயண போராட்டத்தின் நிறைவு நாளில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மக்கள் சக்தியின் முக்கியத்து வத்தையும், போராட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மதுரை நாயக்கர்பட்டி- அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் வரவுள்ள டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஒன்றிய மோடி அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அரிட்டாபட்டியிலிருந்து அழகர்கோவில் வரை, கிடாரிப்பட்டியிலிருந்து நரசிங்கம்பட்டி வரை, தெற்குத் தெருவிலிருந்து மேலூர் வரை 3 நாள் நடைபயணம் நடந்தது. இதன் நிறை வாக ஞாயிறன்று மேலூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. a\
இந்த பொதுக்கூட்டத்தி ற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.கார்த்திக் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் “அரசியலை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பது ஒரு வடிவம். களத்திலே நின்று எதிர்ப்பது இன்னொரு வடிவம். களத்தில் ஏற்படுகிற வெப்பமும், களத்தில் உருவாகிற எதிர்ப்புமாக உருவாகிற போ ராட்டம் தான் கருத்தியலை தீர்மானிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலூர் பகுதியானது தமிழகத்தின் தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி என்றார் அவர்.
மீனாட்சிபுரம், அழகர்கோவில், அரிட்டா பட்டி, திருமோகூர், கீழவளவு, கச்சிராயன்பட்டி ஆமூர் என வரிசையாக பார்த்தால் எல்லாம் 2,500-3,000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிற நிலம் என்றார். உலகத்திலேயே மிகப் பழமையான பாறைகள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ஒன்றிய அமைச்சரிடம் பேசியபோது, “டங்ஸ்டன் திட்டத்தை - ஏலத்தை ரத்து செய்கிற அறிவிப்பை செய்வதில் உங்களுக்கு என்னதான் பிரச்சனை?” என்று தான் கேட்டதாக கூறிய சு.வெங்கடேசன், அதற்கு அமைச்சர், “நாங்கள் ஏலம் விட்டிருக்கிற பகுதி 5000 ஏக்கர். நீங்கள் சொல்லுகிற வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சின்னங்கள் இவைகள் எல்லாம் இருப்பது வெறும் 500 ஏக்கர் மட்டும்தான்; இந்த 500 ஏக்கரை விட்டுவிட்டு மீதம் இருக்கிற 4500 ஏக்கரில் சுரங்கம் தோண்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று இறுமாப்புடன் எதிர்க் கேள்வி கேட்டதாக தெரிவித்தார்.
“வேதாந்தா நிறுவனமும் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனமும் இந்தத் திட்டத்தை ஆதரிக்க கோடானு கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்து ஒரு அடி எடுத்து வைத்தாலும்கூட அதுதான் உண்மையான சவால்” என்றும் சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.
மேலூர் பகுதி மக்கள் வரலாற்று ரீதியாக போராட்டக் குணம் கொண்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், பிரிட்டிஷ் காரர்களுக்கு கடைசி வரை வரி கொடுக்காத நிலமாக இருந்தது மேலூர் நிலம் என்றார். 1908 ஆம் ஆண்டு வரிக் கொள்கையை தமிழ்நாட்டில் அமலாக்க முடியாமல் இருந்தது மேலூர் தாலுகா மட்டுமே என்றும் குறிப்பிட்டார்.
“எல்லா கிராமங்களிலும் பெரியவர்கள்-சிறுவர்கள், ஆண்கள்-பெண்கள் என எல்லோ ருக்கும் இந்த திட்டத்தை பற்றி விழிப்புணர்வு வேண்டும். பணத்திற்கு விலை போகாத தலை வர்கள் இருந்தால் மகிழ்ச்சி! ஆனால் மக்க ளாகிய உங்களின் அரசியல் விழிப்பு ணர்ச்சியை நம்புங்கள்!” என்றும் அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 400 பேராவது இந்த போராட்டத்தில் முனைப்பு டன் ஈடுபட வேண்டும் என்றும், “இந்த ஒப்பந்தம் ரத்து என்று ஒன்றிய அரசு அறிவிக்கிற வரை நாம் போராட்டத்தை தொடர்ந்து முன்னெ டுத்துச் செல்வோம்” என்று உறுதிபட தெரிவித்தார்.
“வரலாற்று சிறப்புமிக்க நடைபயணம் இது; வாலிபர் சங்க தோழர்கள் எடுத்திருக்கிற இந்த முடிவு, நடந்த நடை, இயங்கிய அந்த இயக்கம்... வரலாற்று சிறப்புமிக்க இயக்கம்” என்று பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார். இக்கூட்டத்தில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஆர்.பாலாஜி, புறநகர் மாவட்டத் தலைவர் வி.கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் பா.தமிழரசன், மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கறிஞர் வெற்றி செல்வன் ஆகியோர் பேசினர். புறநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.பால கிருஷ்ணன் நன்றி கூறினார். மாநில-மாவட்டக் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(ந.நி)