districts

img

மண்ணின் மைந்தர்களுக்காக தன் உயிர் ஈந்த தோழர் பாண்டியராஜன் - எம்.ஆர்.முத்துசாமி

தோழர் எம்.பி. பாண்டியராஜன் பழைய வத்தலக்குண்டைச் சேர்ந்தவர். பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர் 5ஆம் வகுப்பு வரை தான் படித்தார். 1957ல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் 1960ல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்டு 1973 செப் 1 ல் நடந்த விலை உயர்வுக்கு எதிரான தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி மதுரை சிறையில் 35 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தவர். 1966-75ல் கிராமதான சங்க தலைவராகவும், 1970-74 ஊராட்சி வார்டு உறுப்பினராகவும் 27.6.74 முதல் 12.9.79 வரை பழைய வத்தலக்குண்டு ஊராட்சித் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றினார். 1968ல் கட்சியின் நிலக்கோட்டை வட்டக்குழு உறுப்பினராகவும், 1985ல் திண்டுக்கல் மாவட்டக்குழு உருவான போது மாவட்டக்குழு உறுப்பினராகவும், 91 வரை கட்சி முடிவுகளை முழுமையாக நிறைவேற்றுபவராகவும் இருந்தார். 1974ல் உணவுப் பதுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போலீஸ் கைது செய்து 10 நாள் சிறைவாசம் அனுபவித்தவர்.

25.11.98 நிலக்கோட்டையில் தீண்டாமை எதிர்ப்பு தர்ணா போராட்டம்,  10.11.2000ல் தீண்டாமை ஒழிப்பு சைக்கிள் பிரச்சாரத்தில் சத்திரப்பட்டி முதல் செந்துறை வரை சென்று வந்தார். புதுக்கோட்டையில் 14.4.2000ல் நடந்த முதல் மாநாட்டில் கலந்து கொண்டார். 27.10.2000ல் எம்.வாடிப்பட்டி சாதிய ஆதிக்க சக்திகளால் பாதிப்புக்குள்ளான தலித்து களுக்கு நிவாரணம் கேட்டு நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவைக் கொடுத்தனர். அடுத்த நாளே விசாரணை செய்து நிவாரணங்களை வழங்கினர்.  ஊராட்சித் தலைவராக இருந்த போது தலித் மக்களுக்கு 40 வீடுகள் கட்டிக் கொடுப்பதில் முன் நின்று குடிநீருக்காக கேணியும் வெட்டிக் கொடுத்திருக்கிறார். இதற்கு சிறப்பு மிகு வரலாறு படைத்தவர் தோழர் எம்.பி.பாண்டியராஜன் அவர்கள்.

இந்நிலையில், டவ் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த ஜீவா என்ற பெண், பழைய வத்தலக்குண்டு, கட்டக்காமன்படடி, குரும்பட்டி தலித் மக்கள் சமூகத்தை சேர்ந்த 100 பேர், விருவீடு, வத்தல்பட்டியை சேர்ந்த பிற்பட்டோர் 50 பேருக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கியில் தலா ரூ.5000 வீதம் ரூ.7,500 வாங்கி பயனாளிகளுக்கு தராமல் ஏமாற்றினார். 2013 ஆகஸ்ட் 5 அன்று வத்தலக்குண்டில் மேற்கண்ட ஜீவாவின் மோசடி மற்றும் காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களைச்  சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் ஆத்திரம டைந்த ஜீவா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர், இப்போராட்டத்தில் முன்ன ணியில் நின்ற தோழர் பாண்டியராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில், 2013 செப்டம்பர் 16அன்று இரவு 8.00 மணிக்கு சைக்கிளில் சென்ற தோழர் பாண்டியராஜன் பழைய வத்தலக்குண்டு திரும்பும் சாலை அனுமார் கோவில் அருகில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஜீவாவின் பால் வாகன ஓட்டுநர் சைக்கிளில் சென்ற பாண்டியராஜன் மீது வாகனத்தை ஏற்றிக் கொலை செய்து விட்டு தப்பினார் எனத் தெரிய வந்தது. தகவலறிந்த தோழர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு தோழர் பாண்டியராஜனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. 

தலித் மற்றும் பிற்பட்ட மக்களின் நலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து தன் உயிர் ஈந்த தோழர் பாண்டியராஜன் நிலக்கோட்டை வட்டார  மக்களின் இதயங்களில் இன்றும் தியாக சீலராக போற்றப்படுகிறார். அவருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் எம்.பி.பி.ஜீவானந்தம் தீக்கதிரில் சிறிது காலமாக பணியாற்றி வத்தலக்குண்டு ஒன்றியக்குழு உறுப்பினராக சில காலம் பணியாற்றி இப்போதும் கட்சி உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். கட்சி அளித்த காப்புத் தொகையிலிருந்து கிடைக்கும் சிறிய தொகையைக் கொண்டு தோழர் பாண்டியராஜ னின் மனைவி எளிய வாழ்க்கை நடத்தி வருகிறார்.  தோழர் பாண்டியராஜனின் பேரன் தீபக்ராஜா, பேத்தி நாகபாரதி இருவரும் பழனியாண்டவர் கல்லூரியில் முறையே மூன்றாம் ஆண்டு, முதல் ஆண்டு படித்து வருகின்றனர். இருவரும் இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகளாக செயலாற்றி வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 17 - தோழர் எம்.பி.பாண்டியராஜன் 10ஆவது ஆண்டு நினைவு நாள்