districts

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை, ஜூலை 11- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி யில் உணவுத்துறை அமைச் சராக இருந்தவர் ஆர்.காமராஜ். தற்போது திருவாரூர் மாவட்ட அதிமுக  செயலாளராகவும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏ வாக உள்ளார். இவர், கடந்த 2015 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31  வரை அமைச்சராக இருந்தபோது, அரசுப்  பதவியை தவறாக பயன் படுத்தி வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரில், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரில் ரூ.58 கோடியே 44 லட்சத்து  38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்த்தது லஞ்ச  ஒழிப்பு துறை விசாரணை யில் தெரியவந்தது. இதன் அடிப்படையில், அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் எம்.கே.இனியன், எம்.கே.இன்பன், உறவினர் ஆர்.சந்திரசேகரன், நண்பர்கள் பி.கிருஷ்ண மூர்த்தி, எஸ்.உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காமராஜ் தொடர்புடைய 52 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.41 லட்சத்து  6 ஆயிரம், 963 பவுன் நகை கள், 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மற்றும் ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை கைப் பற்றப்பட்டன. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த  வழக்கில், 810 பக்க குற்றப் பத்திரிகை திருவாரூர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு  துறையினர் செவ்வாயன்று தாக்கல் செய்தனர். குற்றப் பத்திரிகையுடன், 18,000 ஆவணங்கள், பெட்டி பெட்டி யாக நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டது.