தேனி, டிச.7- வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, சுருளியாறு ஆகிய பகுதிகளிலும் போடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து 6,294 கன அடியாக உயர்ந்தது. 71 அடி உயரமுள்ள வைகை அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி விட்டதால் 70.11 அடியில் நிலை நிறுத்தி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிறன்று வரை 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், திங்களன்று காலை முதல் 8,681 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5855 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு அணையை கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாது காப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டு வருகின்றனர். ஏற்கனவே மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்க ளில் வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வரும் நிலையில், தற்போது மேலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள் ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரி கள் அறிவுறுத்தி வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 29-ம் தேதி 142 அடி யை எட்டியது. அதனைத் தொடர்ந்து கேரள பகுதிக்கு கூடுதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் திங்களன்று காலை 141.95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 4989 கன அடி. கேரள பகுதிக்கு 5638 கன அடி நீரும், தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.