districts

img

வீடு வீடாக வருகிறது கம்யூனிஸ்ட் கட்சி உண்டியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் வளர்ச்சிக்காக நிதி திரட்டுவதற்கு, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மக்களிடம் வீடு வீடாக உண்டியல் ஏந்தி கட்சித் தோழர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்கிறார் எழுத்தாளரும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான கி.ஜெயபாலன்.

2023 டிசம்பர் மாதம் முழுவதும் புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள இடைக்கமிட்டிகள் மூலம் குழுக்கள் அமைத்து, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குச் சென்றோம்.மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி, நிதியுதவி கேட்டோம்.

இந்த இயக்கத்தில் கிடைத்தற்கரிய பல அனுபவங்கள் கிடைத்தன. “மக்களுக்காக போராடுகின்ற கட்சி, குடிதண்ணீர் பிரச்சனை, குடிமனைப் பட்டா உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்குப் போராடு கின்ற கட்சி; மக்களிடம் நிதிபெற்று, உழைக்கும் மக்களுக்காகப் போராடுகின்ற கட்சி; எனவே, மனமுவந்து நிதி தாரீர்” எனக் கேட்டோம். குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு குடும்பத்தினர் தெரிந்தவரெனில் பரவசத்தோடு நிதி வழங்கினர்.

திடீரென கட்சிக்கொடியுடன் சிறு கூட்டத்தைப் பார்த்த பல குடும்பத்தினர், புன்னகையுடன் நிதி வழங்கினர். பெண்கள் மட்டும் உள்ள சில வீடுகளில் “ஆம்பள இல்ல, போய்ட்டு வாங்க” என பதிலளிப்பர். அப்போது “முதலில் துண்டறிக்கை யைப் படியுங்கள். பின்பு உங்களால் முடிந்த நிதியுதவி செய்யுங்கள்” என்போம். சிலர் துண்டறிக்கையைப் பெறுவர்; படிப்பர்; பின்னர் நிதி கொடுப்பர். அதுவரை பொறுமையாக நிற்போம்.  சில வீடுகளில் “ இப்ப எல்லாம் யார் போராடு றாங்க” எனச் சொல்வர். இவர்களிடம் நிகழ்கால அரசியலைப் பேசுவோம்; மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை பட்டியலிடுவோம். கூர்ந்து கவனிப்பர். பின்னர் வீட்டுக்குள் சென்று ரூ.50, ரூ.100க்கு குறையாமல் நிதியை உண்டியலில் போடுவார்கள்.

ஒரு சில வீடுகளில்” ஏதோ நீங்க மட்டும் ஆங்காங்கே கத்துறீங்க” எனச் சொல்லுவர். இவர்களிடமும் நிகழ்கால அரசியலைப் பேசினோம்.இவர்களும் ரூ.50, ரூ. 100க்கு குறையாத பங்களிப்புச் செய்தனர். ஒரு சிலர்,” இந்த ஒன்றிய அரசை எதிர்த்து  ஒண்ணும் பண்ண முடியாது” எனச் சொல்வர். அவர்களிடமும் பொறுமையாக கம்யூனிஸ்ட்டு களின் அரசியல் செயல்பாட்டை விளக்கினோம்.

இதனைப் புரிந்து நிதி வழங்கினர். முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களிடம் வலதுசாரி அரசியலின் பேராபத்தை விளக்கினோம். “சிறுபான்மையினரின் பாது காவலன் மார்க்சிஸ்ட் கட்சியே”எனக்கூறினோம். ஆண், பெண் இருபாலரும் உன்னிப்பாகக் கவனித்து, மகிழ்வோடு நிதியளித்தனர். பல இடங்களில் கேட்காமலே, ஆட்டோ தொழிலாளிகள் உள்ளிட்ட பல தொழிலாளத் தோழர்கள் ஓடிவந்து உண்டியலில் நிதியை செலுத்தினர்.

சிறு கடை வியாபாரிகளிடம் கார்ப்பரேட் கம்பெனிகளால் சிறு வணிகம் பாதிக்கிறது என்றோம். அதை எதிர்த்து போராடுவது இடதுசாரிகள் தான் என்றோம். சிறு வியாபாரிகள் முகம் சுளிக்காது முகம் மலர்ந்து நிதி அளித்தனர்.

உழைக்காமலும், உழைக்கத் திறனின்றியும் உள்ள ஒருவர் தனக்காக யாசிப்பது பிச்சை.  வீடுகள் தோறும் குழுவாக சென்று பக்தியின் பெயரால், மக்களிடம் பெறுவது நவீனசுரண்டல். தெருப்பாடகர்கள், தெரு இசைக்கலை ஞர்கள், தெரு ஓவியர்கள் போன்றோர் மக்களிடம் பெறுவது நன்கொடை. தொண்டு நிறுவனங்கள் பெறுகின்ற நிதியும் நன்கொடையே.

ஆனால் மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்படத் தேவையான நிதியை பெரு முதலாளிகளிடமோ, கார்ப்பரேட்களிடமோ, நிதி பெறாமல் மக்களிடம் பெறுவது என்பது நன்கொடை அல்ல; அது மகத்தான வர்க்கப் போராட்ட இயக்கத்திற்கு மக்களின் நிதிசார்ந்த பங்களிப்பு.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இடைக்கமிட்டிகளும் இதனை மக்கள் சந்திப்பு இயக்கமாக நடத்தி இதுவரை  ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேல் மக்களின்  பங்களிப்பாகப் பெற்றுள்ளோம். வெகு மக்க ளுக்கும் கட்சிக்கும் இடையே ஒரு அணுக்கமான  உரையாடலுக்கு இந்த உண்டியல் வசூல் இயக்கம் ஒரு வாய்ப்பை தந்துள்ளது.

மக்கள் ஏராளமான பிரச்சனைகளைச் சொல்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் தீர்வுகாண வேண்டுமே; அவர்களுக்காக நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டுமே என்கிற உந்துதலை ஏற்படுத்துகிறது.