districts

மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் புதுக்கோட்டையில் ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை, செப்.23 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.  அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளோடு இணைந்து நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்றார். மாநில கல்விக் கொள்கையில் அறிவியல் இயக்கம் முன்னெடுக்கும் பணிகள் குறித்து மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் பேசினார். அறிவியல் இயக்க நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் பேசினர்.  கூட்டத்தில் கீழ்க்கண்ட ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. மாநில அரசு கொண்டு வரும் கல்விக் கொள்கையானது ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டின் சூழலுக்கு ஏற்ப கல்விக் கொள்கை அமைய வேண்டும். தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இருமொழி கொள்கையே தொடர்ந்து நிலவ வேண்டும். பாடம் நடத்தும் பணியே முதன்மையாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பிற பணிகளை வழங்கக் கூடாது. அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், குடிநீர், கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளை காக்க வேண்டும். ஓர் ஆசிரியர் பள்ளிகளை ஈராசிரியர் பள்ளிகளாக செயல்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 சதவீதத்தை கல்விக்கு மட்டும் தனியாக ஒதுக்கி பொதுக்கல்வியை வளர்த்தெடுக்க வேண்டும். தர்க்க சிந்தனை, அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு சிந்தனைகளை உள்ளடக்கிய அறிவியல் பூர்வ கல்வியை வழங்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் மனநல மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். முன் தொடக்க கல்விக்கு புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஆலோசனைகளை மாநில கல்விக் கொள்கையில் இணைக்கும் வகையில் முன்மொழிவாக கூறியுள்ளனர்.