கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி
திருவள்ளூர், மார்ச் 7- திருவள்ளூர் அடுத்த பொலி வாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால்(வயது30)என்ற பெயிண்டர் சித்தேரி சுண்ணாம்பு கால்வாயில் குளிக்கும் போது அதில் மூழ்கி உயிரிழந்தார். இதேபோல் கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினத்தை சேர்ந்தவர் மீனவர் கோபால் (48). இவர் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் துடுப்பு படகில் சென்று மீன்பிடித் தார். அப்போது கோபால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.
மாதர் சங்க கிளைகள் உதயம்
சென்னை, மார்ச் 7 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதிய கிளை கள் மதுரவாயல், மயிலாப்பூர் பகுதிகளில் உதயமானது. மதுரவாயல் பகுதி, அயப்பாக்கத்தில் நடைபெற்ற கிளை அமைப்புக் கூட்டத்தில் சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணச் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக சுதா, செயலாளராக மணிமேகலை, பொருளாளராக அன்னமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மயிலாப்பூர் பகுதி, தேனாம்பேட்டையில் நடைபெற்ற கிளை அமைப்புக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் மோ. சரஸ்வதி எம்.சி., மாவட்ட பொருளாளர் ஜெ.ஜூலியட், பகுதி பொருளாளர் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளைத் தலைவராக ப. ஜெயா, செயலாளராக ர.கங்கா, பொருளாளராக பா.சத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாடு உரிமையாளர்களுக்கு ரூ.2.72 லட்சம் அபராதம்
சென்னை, மார்ச் 7 - மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையில் திரிந்த 176 மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2.72 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக மாடுகள் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றி திரிகின்றன. இந்த மாடுகளை அவ்வப்போது சுகாதாரத்துறையினர் பிடித்து புதுப்பேட்டை, பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்கின்றனர். மாட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு மாட்டிற்கு 1550 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்திவிட்டு மாடுகளை விடுவித்து கொள்ளலாம். மூன்றாவது முறையாக பிடிபடும் மாட்டை, புளூ கிராஸ் சொசைட்டியில் ஒப்படைக்கப்படுகிறது. இதன்படி, மார்ச் 1 முதல் 6ந் தேதி வரை திருவொற்றியூர் 5, மணலி 8, மாதவரம் 8, தண்டையார்பேட்டை 12, ராயபுரம் 10, திரு.வி.க.நகர் 15, அம்பத்தூர் 12, அண்ணாநகர் 24, தேனாம்பேட்டை 22, கோடம்பாக்கம் 22, வளசரவாக்கம் 7, ஆலந்தூர் 7, அடையாறு 2, பெருங்குடி 7, சோழிங்கநல்லூர் 15 என 176 மாடுகள் பிடிக்கப்பட்டது. அவற்றின் உரிமையா ளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மார்ச் 11 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவள்ளூர், மார்ச் 7- திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மார்ச்-18(வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க வருவாய் கோட்ட அளவில், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மார்ச்- 11 அன்று காலை 10மணிக்கு விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தர விட்டுள்ளார். இந்தக்கூட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
வடபழனியில் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை
சென்னை, மார்ச். 7- சென்னை வடபழனி எல்.வி.பிரசாத் சாலையில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பவர் தேவ் ஆனந்த் (29). இவர் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் நேர்முக உதவியாளராக பணி புரிகிறார். தேவ் ஆனந்த், இரு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தர்மபுரி சென்றார். அங்கிருந்து தேவ் ஆனந்த், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.