districts

img

நமக்கு என்ன வேண்டும் என்பதை தெரிந்து தயாராவோம்

திருப்பூர், மே 17- இந்திய மாணவர் சங்கம் மற்றும் தீக்கதிர் நாளிதழ் இணைந்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திருப்பூர் குமார் நகரில் வெள்ளியன்று நடைபெற்றது. 

பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் முன்பு, என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எதை படிக்கலாம் என்கிற குழப்பம் பொதுவாகவே மாணவர்களுக்கு ஏற்படுவது உண்டு. இந்த குழப்பத்தை பயன்படுத்தி, வழிகாட்டுகிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கில் கட்டணம் பெறும் நிறுவனங்களும் உண்டு. இத்தகைய கட்டணங்களை கட்ட முடியாத உழைப்பாளி மக்களின் குழந்தைகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்ள இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சீரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 

இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் தீக்கதிர் நாளிதழ் இணைந்து நடத்திய உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார் இந்நிகழ்விற்கு தலைமை ஏற்றார். இதில், கல்வியாளர்கள், போட்டி தேர்வு பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்று, கோவை மாவட்டம் புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் த.வீரமணி, கலை மற்றும் அறிவியல் கற்றுத் தேர்வோம் என்ற தலைப்பில் பேசுகையில், இது போன்ற நிகழ்ச்சிகளை நட்சத்திர விடுதிகளில் வைத்து பணம் வசூல் செய்து சந்தைப்படுத்தும் விதமாக நடத்துவார்கள். ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவசமாக இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் மாணவர் சங்கம் மற்றும் தீக்கதிர் நாளிதழுக்கு முதலில் நன்றி. 

ஒன்றிய அரசு கல்விக் கொள்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள காலக்கட்டம் இது. இதனால் நாடு தழுவிய அளவில் கல்வி கற்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இச்சூழ்நிலையிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 160 உள்ளன. அரசு கல்லூரிகள் இல்லை என்றால் ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவு நிறைவேறாது. தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்க செலவாகும் தொகையை விட மிக மிக குறைவாக தான் மூன்று ஆண்டுகள் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு பெற செலவாகும்.

முட்டாள் குழந்தை என்று ஒன்றே கிடையாது
இன்றைய நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்பு என்ன படிக்க வேண்டும் என்கிற கேள்வி தான் முதலில் எழுகிறது. மனோதத்துவ நிபுணர்கள் குழந்தைகளில் முட்டாள் என்றோ எதற்கும் உதவாத குழந்தை என்றோ ஒன்று கிடையவே கிடையாது என்கிறார்கள். குழந்தைகளின் திறனை கண்டறிந்து அதற்கு ஏற்ப கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டயப் படிப்பு முடித்தால் அரசு அதிகாரத்தில் உயரிய அதிகாரம் கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர் கூட ஆகலாம். 

குறிப்பாக, பெற்றோர்கள் குழந்தைகளின் மீது அதிகப்படியான அழுத்தத்தை தரக்கூடாது. அரசு கல்லூரிகளில் உயர்ந்த கட்டிடங்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனர். அதில் இலவசமாக படிக்க வாய்ப்பு உள்ளது. அரசு பொறியியல் கல்லூரியில் ரூபாய் 7500 மட்டுமே கட்டணம். பட்டயப் படிப்பு முடித்துவிட்டு ரெக்கொயர்மெண்ட் எக்ஸாம்ஸ் எழுதினால் பல்வேறு அரசு துறைகளில் உள்ள பணிகளில் சேரலாம். முதலில் ஒரு பட்டையப் படிப்பில் சேர்ந்து விடுங்கள், அதன் பின் மேலும் படிக்கலாமா வேலைக்கு செல்லலாமா என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றார்.

இதையடுத்து போட்டி தேர்வுகளை எதிர்கொள்வோம் என்ற தலைப்பில் போட்டி தேர்வு பயிற்றுநர் கே.கணேஷ் பேசுகையில், எந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் 100 நபர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால், அதில் குறைந்தது 50 நபர்கள் இலவச பயிற்சி மையங்களில் படித்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் சமூகம் சார்ந்தே இருக்கும். தினசரி செய்தித்தாள்களில் படிப்பதில் இருந்து தொடங்குங்கள். 

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரத்திற்குள் அந்த தேர்வை முடிக்க வேண்டும். அந்த தேர்வில் நாம் தேர்ச்சி பெற ஆறு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் நாம் மீண்டும் படிக்க வேண்டும். பெரும்பாலான கேள்விகள் அதிலிருந்து தான் கேட்பார்கள். சென்ற தலைமுறைக்கு 100 கேள்விகளுக்கு 105 பதில்கள் தெரிந்திருந்தால் போதும். ஆனால் இப்போது உள்ள தலைமுறைக்கு 130 பதில்கள் தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்தாலே டிஎன்பிஎஸ்சி, ரயில்வே, எஸ்எஸ்சி, எம்டிசி உள்ளிட்ட தேர்வுகளை எழுதி அரசு வேலைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. என்றார்.

லட்சங்களை பறிக்கும் மோசடி கும்பல்
தொழிற்கல்வியில் தேர்ச்சி பெறுவோம் என்ற தலைப்பில் கற்பகம் கல்வி குழும ஆசிரியர் இ.செந்தில்வேல் பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு முடித்தவுடன் எழக்கூடிய மிகப்பெரிய கேள்வி எந்த கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்ற கேள்வி தான். இப்போதெல்லாம் பிரபல கல்லூரியில் சேர்த்து விடுகின்றேன் என்று கூறி பல லட்சங்களை பறிக்கும் மோசடி கும்பல்கள் அதிகரித்துள்ளன. மாணவ, மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சென்ற ஆண்டு பொறியியல் படிப்பில் மட்டும் அரசு ஒதுக்கிய இடங்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரம். அதுபோக ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 940 தனியார் இடங்கள். இதில், 44 ஆயிரத்து 703 இடங்கள் காலியாக இருந்தன. 16 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை. கவுன்சிலிங்கில் மட்டும் ஒன்றரை லட்சம் சீட்டு உள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் கட்டி மாணவர்கள் சேர வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களில் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. ஜெஇஇ உள்ளிட்ட தேர்வுகளை எழுதி ஐஐடி, என்ஐடி, காந்தி யுனிவர்சிட்டி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் இணையலாம். ஐஐடியில் 25 ஆயிரம் இடங்களும், என்ஐடி யில் 17 ஆயிரம் இடங்களும், காந்தி யுனிவர்சிட்டியில் 8 ஆயிரம் இடங்களும் உள்ளன. 

வருங்காலத்தில் கணினி துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் மாணவ, மாணவிகள் ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் போன்ற படிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது போன்ற படிப்புகளை தேர்வு செய்வதற்கு முன், கல்லூரியில் இதற்கான பாடங்களை எடுப்பதற்கு தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா என்பதை மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் கணினி துறையில் பிஎச்டி முடித்த ஒருவரால் தான் இந்த பாடங்களை எடுக்க முடியும். இதற்கு வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளதால் பல கல்லூரிகளில் இந்த பிரிவுகளை கடந்த ஆண்டுகளில் இணைத்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளின் வசதிகள், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், முடித்து வெளியேறுகின்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை கணக்கிட்டு கல்லூரிகளின் தரவரிசையை வெளியிடும். அதன் அடிப்படையில் கல்லூரிகளை தேர்ந்தெடுங்கள். 

பிஇ, எம்பிபிஎஸ் தவிர வேறு என்ன படிக்கலாம் என்றால். வேளாண்மை துறை (அக்ரி) உள்ளது. தமிழகத்தில் மட்டும் 26 அரசு கல்லூரிகளும் ஐந்து தனியார் கல்லூரிகளும் உள்ளன. வரைதலில் திறமை மிக்கவர்களாக இருந்தால் ஆர்க்கிடெக்ட் சேரலாம். கிட்டத்தட்ட நான்காயிரம் சீட்டுகள் உள்ளது. சட்டக் கல்லூரியில் சேரலாம். ஏழு அரசு கல்லூரியும், ஒரு தனியார் கல்லூரியும் உள்ளன.  மூன்றாண்டு நான்காண்டு போல ஐந்து ஆண்டுகள் படிக்கக்கூடிய இன்டெக்ரேட்டடு கோர்சஸ் உள்ளது. பிடெக் எம்எஸ் போன்ற படிப்புகள். நேஷனல் டிபன்ஸ் அகாடெமி, ஓசன் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன. வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்புபவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஐஇஎல்டிஎஸ் முடித்துவிட்டு அயல்நாட்டில் உதவித்தொகையுடன் இலவசமாக படிக்கலாம். ஃபாரின் எக்சேஞ்ச் ப்ரோக்ராம் மூலம் பாதி படிப்பை நம் நாட்டிலும் மீதியை வெளிநாடுகளிலும் படிக்கலாம்.

எம்பிபிஎஸ் தவிர்த்து மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளில் டி ஃபார்ம் படிக்கலாம். 250 முதல் 400 சீட்டுகள் வரை உள்ளது. எதிர்காலம் என்பது நனோ டெக்னாலஜி, ஏஐ டெக்னாலஜி உள்ளிட்டவைகள் சார்ந்து தான் இருக்கும். பொறியியல் படித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வையும் தேர்ந்தெடுக்கலாம். கல்லூரியில் சேர்வதற்கு முன் அந்தக் கல்லூரி குறித்தும் அதில் படித்து முடித்தவர்களின் வேலைவாய்ப்பு குறித்தும், பிற நாடுகளில் கல்லூரிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் தெரிந்து கொண்டு கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மாணவர் சங்க திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஜெய்வாபாய் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி ஸ்வேதாவை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மாவட்டத் தலைவர் க.சு.கல்கிராஜ் நன்றி கூறினார். இதில் மாணவ, மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர். 

;