அவிநாசி,டிச.12- அவிநாசி அருகே அம்மாபாளையம், கானக்காடு பகுதியில் உள்ள பாறைகுழிகளில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிறன்று பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர் பிரிவு மற்றும் கானக்காடு பாறைக் குழிகளில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடுமையான துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இப்பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டுவதை உடனடியாக திருப்பூர் மாநகராட்சி நிறுத்த வேண்டும் எனக்கோரி, ராமகிருஷ்ணன் பள்ளி வீதி, ராம் நகர், செல்வா விநாயகர் வீதி, கம்பர் வீதி, பத்மாவதி நகர், குமரன் காலனி, எஸ்கே அவென்யு, சுகம் ரெசிடென்சி, சொர்ணபுரி கார்டன் உள்ளிட்ட சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட குடியிருப்போர் பகுதிகளில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் அம்மாபாளையத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் முன்பு உள்ள இருபுற சாலையிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் பாரதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் லதா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பூபதி, திராவிடர் விடுதலைக் கழகம் முகில் ராசு, மக்கள் நீதி மையம் இன்பராஜ், ஊர் தலைவர் ஜெயக்குமார், துணைத் தலைவர் கருப்புசாமி உட்பட அனைத்து அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.