திருநெல்வேலி, ஜூன் 17- சாதி மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் நீதி மன்றமே முன்வைத்துள்ள சட்டமுன் வடிவை தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றி இந்தியாவுக்கே முன்னுதாரண மாகத் திகழ வேண்டும் என்றும், சாதி யை வைத்து அரசியல் செய்வதை தடுக்கவும், சாதிவெறியூட்டும் அமைப்புகளை தடை செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது
சிபிஎம் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
திருநெல்வேலியில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட புது மண தம்பதியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆதரவளித்துப் பாது காத்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் கூலிப்படையினருடன் வந்து கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தையும் ஊழியர்களையும் தாக்கினர். இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜுன் 17 திங்களன்று மாலை திருநெல்வேலியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர் களை திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகத்தில் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:
சமூக விரோத - சாதிய சக்திகளின் அராஜகத்தை அனுமதிக்க முடியாது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் பல்வேறு அர சியல் கட்சியினர் பங்கேற்று, இது போன்ற தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற தாக்குதல்களை நடத்த சமூக விரோத - சாதிய சக்திகளை அனுமதிக்க கூடாது. மாநிலம் முழுவதும் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் காவல்துறையும் முன்வர வேண்டும்.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத் தில் கடந்த பல ஆண்டுகளாக அடிக் கடி சாதிவெறி படுகொலைகள் நடப் பது தொடர்கதையாக உள்ளது.
திருமண வயதை எட்டியவர்கள் யாரை திருமணம் செய்துகொள்வது என்பது அவர்களது தனியுரிமை. அது சட்டம் அளித்திருக்கும் உரிமை. 90 சத விகித திருமணங்கள் பெற்றோர் விருப்பத்தின்படியே நடக்கின்றன. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள் வோரை கட்டுப்படுத்துவதும் தடுப்ப தும் படுகொலை செய்வதும் மிகச் சாதாரணமாக நடக்கிறது.
தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் ஆணவக்கொலைகள்
சாதி ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்கிற அவப்பெயருக்கு தமிழ்நாடு உள்ளாகி இருக்கிறது. இதுபோன்ற செயல் களை அனுமதிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல. பாரதியார், வ.உ.சி, வைகுண் டர் போன்ற சாதி மறுப்புத் தலைவர்கள் பிறந்திருக்கும் இந்த மண்ணில் சாதியின் பெயரால் படுகொலைகள் நடக்கின்றன. இத்தகைய சாதிக் கொடுமைகள் நடப்பதை அனுமதிக்க முடியாது. இந்த சம்பவத்தை ஒரு படிப் பினையாக ஏற்றுக்கொண்டு அரசியல் கட்சிகளும் சமூகத்தில் இருக்கும் அமைப்புகளும் பொதுமக்களும் செயல்பட வேண்டும். இதில் அரசும் தீவிரமாக செயல்பட வேண்டும்.
சாதி மறுப்புத் தம்பதிகளுக்கு என்றென்றும் துணை நிற்போம்
சாதி மறுப்புத் திருமணத்தை ஆத ரித்ததற்காக எங்கள் மீது சிலர் கடுமை யான விமர்சனத்தை முன் வைக்கின்ற னர். நாங்கள் யாரையும் கடத்திச் சென்று திருமணம் செய்து வைக்கவில்லை. சட்டம் அளித்துள்ள உரிமையை பயன் படுத்தி திருமணம் செய்துகொண்ட வர்கள் பாதுகாப்புக்காக எங்களை நாடி வருகின்றனர். அவர்களுக்கு பாது காப்பு அளிக்கிறோம். இது எங்களது கடமை. இன்று மட்டுமல்ல, என்றென் றைக்கும் இதைச் செய்வோம். இது போன்று திருமணம் செய்துகொண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நபர் களுக்கு பாதுகாவலராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழும்.
இத்தகைய தம்பதியருக்கு அரசு பாதுகாப்பு அளிக்கவேண்டும். பெற் றோர்களால் புறக்கணிக்கப்பட்டி ருக்கும் இவர்களுக்கு வேலையும் வீடும் அரசு கொடுக்க வேண்டும். அவர் கள் வாழ்வதற்கு வருவாய் உள்ளிட்ட தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
பெற்றோரே கொலைக் கரங்களாகும் அவலம்
‘நீங்கள் ஏன் பாதுகாப்பு அளிக்க வேண்டும், ‘பெற்றோர்களிடம் விட்டு விட வேண்டியதுதானே’ என்கிற வாதம் முன் வைக்கப்படுகிறது. அப்படி எத்த னையோ நிகழ்வுகளை நாம் பார்த்து வருகிறோம். அடுத்த நாளே தன் மக ளை அடித்துக்கொன்று தூக்கில் தொங்க விடுகிறார்கள். சமரசம் பேசி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாப்பிள்ளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். பெற்றோர்களிடம் ஒப்படைப்பது என்பது நேராக கொலைக்களத்துக்கு அனுப்புவதாகும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒருபோதும் அந்த தவறைச் செய்யாது.
திருநெல்வேலியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் சாதி மறுப்புத் தம்பதிகளை பாதுகாக்கும் பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தை அடுத்த நிலைக்கு நகர்த்த முன்வர வேண்டும். ஆயிரமாண்டு சாதிச் சகதிக்குள் மூழ்கி மக்களை அழியவிடக் கூடாது.
பிழைப்பிற்காக சாதி அமைப்பு நடத்தும் சமூக விரோதிகள்
சாதியின் பெயரால் நடக்கும் ஆண வக் கொலைகளால் எத்தனை உயிர் களை தமிழ்நாட்டில் பலி கொடுத்திருக் கிறோம். வாழப் பிறந்த இளம் தளிர்களை அழித்து ஒழிக்கிறார்களே! தங்கள் பிள்ளைகள் கொல்லப்படுவ தோடு மட்டுமல்ல; வழக்கு, நீதிமன்றம், சிறை என அந்த குடும்பங்களே ஒட்டு மொத்தமாக அழிந்துபோகும் நிலை தானே ஏற்படுகிறது. இதற்கு அடிப் படைக் காரணமே சாதிய அமைப்புகள் தான். சாதியை வைத்துக் கொண்டு அர சியல் பிழைப்பு நடத்தும் சிலர் சாதி உணர்வைத் தணியவிடாமல் மேலும் மேலும் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். எனவே சாதிய அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அரசு சட்டமாக்க வேண்டும்
தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஆணவக்கொலைக்கு எதிராக நீதி மன்றமே முன்வைத்துள்ள சட்டமுன் வடிவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும். காதல் திருமணத் தம்பதி யரை பாதுகாப்பற்கான தெளிவான வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. அனைத்து மாநிலங் களின் தலைமைச் செயலாளர் களுக்கும் அந்த பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் அனுப்பி உள்ளது.
எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, சாதி மறுப்புத் திரு மணங்களை பாதுகாக்கவும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கவும் இந்தி யாவுக்கே முன்னுதாரணமாக தமிழக சட்டமன்றம் அந்தச் சட்டத்தை நிறை வேற்ற வேண்டும். வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இதை வலியுறுத்தும். இதர கட்சிகளுடன் ஒத்த கருத்தை உரு வாக்க முயற்சிக்கும்.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
பேட்டியின்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், பி.கற்பகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.
மாஞ்சோலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்!
“நூறாண்டு காலமாக செயல்பட்டு வந்த மாஞ்சோலை தோட்டம் பிரச்சனைக்குரியதாக மாறி இருக்கிறது. குத்தகை காலம் முடிந்து அந்த நிறுவனம் வெளியேறுவது சரியே. அதே நேரத்தில் அந்த தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோட்டத்தை முற்றிலும் மூடுவது சரியானது அல்ல. ‘டான்டீ’ என்கிற நிறுவனத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் மாஞ்சோலை தோட்டத்தை தொடர்ந்து நடத்த அரசு முயற்சிக்க வேண்டும். மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு அதன் மூலம் நிரந்தர வேலையும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். இதற்காக தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம்” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.