districts

img

பட்டியலின இளைஞர் ஆணவப் படுகொலை?

ராணிப்பேட்டை, ஆக. 21- ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம் கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட பெருங்காஞ்சி கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த நரசிம்மன்-மகேஸ்வரி தம்பதியின் இரண்டாவது மகன் கதிர்வேல். பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (டிப்ளமோ) படித்து வந்தார்.   அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைசார்ந்த சுரேஷ் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பெண் வீட்டார், சில மாதங்களுக்கு முன்பு கதிர்வேல் அம்மாவை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் திங்களன்று (ஆக. 19) இரவு நிவேதாவின் தொலைபேசி அழைப்பால் வெளியில் சென்ற கதிர்வேல் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், செவ்வாயன்று (ஆக. 20) அங்குள்ள கிணற்றின் அருகே கதிர்வேலின் ஒரு காலணி இருந்ததை பார்த்துள்ளனர். பிறகு, இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பிறகு, சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர் வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி கதிர்வேல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நிவேதாவின் தந்தை யிடம் நியாயம் கேட்க அவரது வீட்டிற்கு சென்ற போது கதிர்வேல் குடும்பத்தினரை நிவேதாவின் தந்தை சுரேஷ், தாய் ராசாத்தி,மற்றும் கார்த்தி ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் புதனன்று (ஆக. 21) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செய லாளர் சீம. ரமேஷ் கருணா தலைமையில் சோளிங்கர்-வாலாஜா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  பிறகு, அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.