திருச்சிராப்பள்ளி, பிப்.21- தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான விடுதியில், சமைக்கும் முறையை மாற்றி அமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சென்ட்ரல் கிச்சன் என்னும் முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் மாவட்டம் தோறும் ஒரு சமையல் கூடம் என்ற அடிப்படையில் மாவட்டங்களில் உள்ள அனைத்து விடுதிகளுக்கும் ஒரே இடத்தில் உணவு சமைத்து கொண்டு செல்லும் சென்ட்ரல் கிச்சன் முறை என தமிழக அரசால் கூறப்படுகிறது. திட்டம் அமலுக்கு வந்தால் மாணவர்களின் அன்றாட உணவு முறையிலும், அவர்களின் கால நெறிமுறைகளிலும் பல்வேறு சிக்கல் ஏற்படும். அத்தோடு மாணவருக்கு அளவு சாப்பாடு என்ற கட்டுப்பாடும் ஏற்படக்கூடும். எனவே மாணவர்களுக்கு விரோதமான விடுதிகளுக்கான சென்ட்ரல் கிச்சன் திட்ட முறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, பிப்.26 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில், விடுதி மாணவர்கள் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வைரவளவன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆமோஸ். மாநில துணைத் தலைவர் சரவணன், மாநில குழு உறுப்பினர் சூர்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாநில இணைச் செயலாளர் ஜி.கே. மோகன் நிறைவுரையாற்றினார்.