districts

img

மருதூரில் கதவணை அமைக்கக் கோரி சிபிஎம் குளித்தலையில் போராட்டம்

கரூர், பிப்.26-  கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள மருதூர், திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள உமையாள்புரம் இடையே, காவிரி ஆற்றின் குறுக்கே, ரூ.789 கோடி மதிப்பில் கதவணை கட்டப்படுவதாக தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்து. இப்பணியை மேற்கொள்ளாமல் அதனை கைவிட்டதன் மர்மம் என்ன? இந்த கதவணை அமைப்பதால் கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், தென் மாவட்டங்களுக்கு குளித்தலை பகுதி காவிரி ஆற்றில் இருந்து தான், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி நீர், பைப் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. கோடைகாலங்களில் காவிரி ஆற்றில் நீர் இன்றி, அருகே உள்ள ஊர்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. நிலத்தடி நீர் அதிகரிக்கவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும் இப்பகுதியில் கதவணை அமைப்பதால், நீர் தேக்கம் செய்திட இந்த ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் கதவணை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.