தஞ்சாவூர், டிச.4 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கழனிவாசல் ஊராட்சி சோழகனார்வயல் பகுதியைச் சேர்ந்தவர் பெரமையன்(60). தச்சுத் தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவு காரணமாக வேலை இல்லாமல் உள்ளார். இவரது மனைவி சுசீலா(55) பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார். இதில் பால் விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோமாரி நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இவர்களது பசுமாடு, வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தது. வாழ்வாதாரத்தை காப்பாற்றி வந்த பசுமாடு உயிரிழந்ததால் சுசீலா கதறி அழுதார். இதுகுறித்து, கழனிவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் ரமாகுமார் கால்நடைத்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கால்நடை மருத்துவர் பிரகாஷ், வருவாய் துறையினர் நேரடியாக வந்து, இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். பின்னர், உடற்கூராய்வு செய்து பசுமாடு புதைக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் ரமாகுமார் கூறுகையில், “எவ்வித வருவாய் ஆதாரமும் இல்லாமல் உள்ள சுசீலா குடும்பத்திற்கு, மாவட்ட நிர்வாகம் பசுமாடு வழங்கி உதவி செய்ய வேண்டும்” என்றார்.