திருச்சிராப்பள்ளி, அக்.10 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் சரிவர உணவு பாதுகாப்பு இல்லாததால், உணவு விஷமாக மாறி 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 மாணவர்கள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் குழுவும், அந்தந்த மாவட்டத்திலுள்ள விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்க, திருச்சி மாவட்டத்தில் செயல்பட கூடிய அரசு மற்றும் தனியார் விடுதிகளில், சுகாதாரமான முறையில் விடுதிகள் பராமரிக்கப்படுகிறதா?, வழங்க கூடிய உணவு சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ள இந்திய மாணவர் சங்க மாவட்டக் குழுவிற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்திருந்தார்.