தஞ்சாவூர், ஜூலை 5-
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்-சேய் நலன் பாதுகாப்புக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்புச்சாவடி, சீனிவாசபுரம் ஆகிய நான்கு ஆரம்ப சுகாதார நிலையங் களில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 107 கர்ப்பிணிகளுக்கு உயரம், எடை, ரத்த அழுத்தம், ரத்த நிறமி யின் அளவு மற்றும் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
முகாமில் 19 வயதுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தவர்கள், 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைந்தவர்கள், கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய மற்றும் சிறுநீரக கோளாறு உடையவர்கள், 140 செ.மீட்டருக்கு குறைவாக உயரம் உள்ளவர்கள் ஆகியோர் அதிக கவனம் தேவைப் படும் கர்ப்பிணிகளாக வகைப்படுத்தப்பட்டு, நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
கர்ப்பிணிகள் பேறுகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய உணவு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள், தாய் சேய் நல செவிலியர்கள் செய்திருந்தனர்.