தஞ்சாவூர், பிப்.9- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சி வெளிமடம் கிராமத்தில் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நாடியம் ஊராட்சியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மாநில சாலை விரிவாக்கத்தின்போது வெங்கட்ராமன் குளம் மற்றும் ஆண்டிக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, குளத்திற்கு தண்ணீர் செல்லமுடியாத நிலை இருந்து வந்தது. இதனால் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய தண்ணீர் வசதி இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, பி.எஸ். ருக்கூன், தாமரைச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து மாவட்ட உயர் அலுவலர்களை சந்தித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி, உதவி கோட்டப்பொறியாளர் விஜயகுமார், பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை, சேதுபாவாசத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாய்க்கால் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றி குளத்திற்கு தண்ணீர் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து நெடுஞ்சாலைத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.