districts

திருச்சி முக்கிய செய்திகள்

மண்புழு உரம் தயாரிப்பு செயல் விளக்கம்

தஞ்சாவூர், மே 19 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் உள்ள  செருவாவிடுதி கிராமத்தில், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாண வர்கள் விளக்கம் அளித்தனர்.  மண்புழு உரம் பயன்படுத்துவதன் நன்மை பற்றியும் அதனை தயாரிக்கும் முறை பற்றியும் எடுத்துரைத்தனர். மேலும் விவசாயி ஒருவரின் நிலத்தில் மண்புழு உரம்  உருவாக்கும் தொட்டியமைத்து அதில் தொழு உரம், தென்னை நார், காய்ந்த சரகு போன்றவற்றை அடுக்கி  ஒவ்வொரு அடுக்கும் சாண கரைசல் மற்றும் தண்ணீர் தெளித்து வந்தனர்.  பிறகு மூன்று நாட்கள் கழித்து மண் புழுக்களை அதில் விட்டனர். இத்தொட்டி மிகவும் பய னுள்ளதாக இருந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.  இத்தொட்டியை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி  இறுதியாண்டு மாணவர்கள் அமைத்துக் கொடுத்தனர்.

ஹஜ் பயணம்: வழியனுப்பு விழா

பாபநாசம், மே 19 - தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் இந்தாண்டு சவுதி  அரேபியா, மக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள் ளும் இசுலாமியர்களுக்கு, ராஜகிரி தான் ஸ்ரீ உபைய துல்லா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் வழிய னுப்பு விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாக உறுப்பினர் அப்துல் பாரி தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி நிர்வாக உறுப்பினர் முகமது பாரூக் வரவேற்றார். ராஜகிரி தான் ஸ்ரீ உபைதுல்லா மெட்ரி குலேசன் மேல்நிலைப் பள்ளி இமாம் முகைதீன் நூரி,  ராஜகிரி பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சாகுல் ஹமீது, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஹஜ் பயணிகள் ஒருங்கிணைப்பாளரும், அம்மா பேட்டை முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவருமான சுலை மான் பாட்ஷா, பள்ளித்தாளர் நூர் முகமது, நிர்வாக  உறுப்பினர் சுல்தான் இப்ராகிம், ராஜகிரி நிஸ்வான் பள்ளி  தாளாளர் முகமது பாரூக், தென்காசி மாவட்டம் சுரண்டை  நகராட்சி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் இமாம் மைதீன் அகமது ஷா வாஹிதி, பொருளாளர் ஷாஜி அலி,  பள்ளிவாசல் உறுப்பினர்கள் அபு உபைதா, அப்துல் காதர் ஜெய்லானி, அப்துல் ஜப்பார், கல்லுத் கனி உள்ளிட் டோர் பேசினர். ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

கஞ்சா கடத்திய இருவர் கைது 

தஞ்சாவூர், மே 19- ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு 25 கிலோ  கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேரை வல்லம் காவல்துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தப் படுவதாக வல்லம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல்  கிடைத்தது. இதையடுத்து வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நித்யா உத்தரவின் பேரில், ஆய்வா ளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் தனிப்படை  காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்ட னர். அப்போது தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் வல்லம் பிரிவு சாலை அருகில் சந்தேகப்படும்படி நின்றி ருந்த ஆண் மற்றும் பெண் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசிய தால் இருவரையும் வல்லம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள்  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணவாளநல்லூரைச் சேர்ந்த வேல்முருகன் (37) என்பதும், அவருடன் வந்த பெண் தேனி, ஆண்டிப்பட்டி மூலக்கடை பகுதியைச் சேர்ந்த சோலையம்மாள் (38) என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையை காவல்துறையினர் சோதனை செய்ததில், 25 கிலோ கஞ்சா  இருப்பது தெரியவந்தது. இந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து தஞ்சாவூரில் விற்பதற்காக கொண்டு  சென்றதும் தெரிந்தது. இதையடுத்து வல்லம் காவல்து றையினர் வழக்குப் பதிந்து வேல்முருகன் மற்றும் சோலை யம்மாளை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

3.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

அரியலூர், மே 19 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? எவரேனும் புகையிலைப் பொருட்களை வாகனங்களில் பதுக்கி வைத்து எடுத்துச் செல்கின்றனரா? என ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத் தில் மோட்டார் சைக்கிளில் மூட்டையை வைத்துக் கொண்டு, சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டி ருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு  சென்று போலீசார் சோதனை செய்த போது, அரசால் தடை  செய்யப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 3.5 கிலோ  ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட  புகையிலை பொருட்களை சாக்கு மூட்டையில் வைத்திருந்தது தெரிய வந்தது.  மேலும் அவர் ஜெயங்கொண்டம் அண்ணா நகரைச்  சேர்ந்த வசீகரன் (24) என்பதும், புகையிலை பொருட்களை  விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வசீகரன் மீது வழக்கு  பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக  சாக்கு மூட்டையில் கொண்டு சென்ற ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக்  கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், மே 19- பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வி யாண்டிற்கு அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரம் தொழில்பயிற்சியுடன் கூடிய  பட்டயப்படிப்பிற்கு https://tnpoly.in என்ற இணைய தளம் வாயிலாக மாணவ-மாணவிகள் 24.5.2024 வரை விண்ணப்பிக்கலாம். அல்லது கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கல்வி பாடப்பிரிவுகளான அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவி யல் மற்றும் தொடர்பியல் துறை, கணிப்பொறியில் துறை  ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் 150 ரூபாய் மட்டுமே. மாண வர்கள் பதிவு கட்டணத்தை கிரெடிட், டெபிட் கார்டு மற்றும்  வங்கி இணையதளம் மூலம் செலுத்தலாம். எஸ்.சி./எஸ்.டி மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  கிடையாது. முதலாமாண்டு முழு நேரம் தொழில்பயிற்சி யுடன் கூடிய பட்டயப்படிப்பிற்கு இணையதளம் மூல மாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதி வேற்றம் செய்ய 24.05.2024 அன்று கடைசி நாள்.  முதலாமாண்டு முழுநேரம் தொழில்பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்பிற்கு 10 ஆம் வகுப்பு  தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.  கல்விக்கான கட்டணம் இலவசம், சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்ட ணம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,200 மட்டுமே செலுத்த வேண்டும்.  இக்கல்லூரியில் தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள். ஸ்மார்ட் கிளாஸ் உள்பட அனைத்து வசதி களுடன் கூடிய ஆய்வகங்கள், மாணவர்களுக்கு அரசு  இலவச விடுதி, மாணவியர்களுக்கு கல்லூரிக்கு எதிரில்  அரசு இலவச விடுதி, இருபாலருக்கும் அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுடைய மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச பேருந்து பயண அட்டை, வேலைவாய்ப்பு பிரிவின் மூலமாக மூன்றாமாண்டு இறுதியிலேயே வேலை  வாய்ப்பு உறுதி செய்யப்படும். 2023-2024 ஆம் கல்வியாண்டின் இறுதியாண்டில் பயின்ற 167 மாணவர்களின் 100 சதவீத மாணாக்கர் களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் குறைந்த பட்ச சம்பளம் மாதம் ரூ.15,000 முதல் 21,000 வரை பெற்றுள் ளனர்.  மாணவர் சேர்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் அறிய அரசி னர் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 04328-243200, 8610739233, 9486408103, 9361357035, 9976867331, 99943 33392, 9003794703 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டோ பயன்பெறலாம் என கல்லூரி முதல்வர் து.முகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தனியார் சிமெண்ட் ஆலையால்  சுற்றுச்சூழல் மாசு, விபத்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மே 19 - தனியார் சிமெண்ட் ஆலைகளால் விபத்து ஏற்படு வதை கண்டித்தும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அரியலூர் நகரைச் சுற்றி ஏழுக்கும் மேற்பட்ட தனியார்  சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலை யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் அருகே உள்ள டால்மியா சிமெண்ட் ஆலையில் பயனற்ற பிளாஸ்டிக் குப்பைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் கரும்புகை மூட்டம் காணப்பட்டு மக்கள் மூச்சு திணற லால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிமெண்ட் ஆலைகளுக்கு  இயக்கப்படும் கனரக வாகனங்களால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.  இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமோ சுற்றுச் சூழல் மாசுக் கட்டுப்பாட்டு துறையோ எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிமெண்ட் ஆலைகளால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும். சிமெண்ட் ஆலைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் அனுமதியின்றி பெரும்பாலான சுண்ணாம்பு  சுரங்கங்கள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.  இதனை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

உயிருக்கு போராடிய கர்ப்பிணியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் 

இராமநாதபுரம், மே 19- இராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.இவரது மனைவி சாரதி.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள னர். கடந்த 30 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவம் மூலம் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. பிர சவத்திற்கு பின்னர் இயல்பாக சுருங்க வேண்டிய கர்ப்பப்பை சுருங்காததன் காரணமாக அதிக அளவில்  ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதன் காரண மாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி  தாயை மருத்துவர் தினேஷ் முகில் மற்றும் நந்தினி மற்றும்  செவிலியர்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர் காப்பாற்றி னர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். துரித மாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவமனைகள் மற்றும் செவிலியர்களுக்கு அந்த பெண்ணின் உற வினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

சென்னையில் திருடிய பைக்கில் ஒட்டன்சத்திரத்தில் சுற்றிய வாலிபர்

ஒட்டன்சத்திரம், மே 19- சென்னை வண்டலூரைச் சேர்ந்தவர் ரியாஸ்அகமது. இவர் கடந்த 1.10.2020 ஆம்  தேதி வண்டலூர் பிரீட்ஜில் தனது இருசக்கர வாக னத்தை நிறுத்தியிருந்ததை காணவில்லை. இது குறித்து அளித்த புகாரின் பேரில் வண்ட லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் போக்கு வரத்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.அப் போது திண்டுக்கல் சாலையை நோக்கி வந்த வாலிபர் ஓட்டி  வந்த பைக்கை நிறுத்தமுயன்றனர். ஆனால் அந்த  வாலிபர் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார். இதனையடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பைக்கின் எண்ணை பார்த்து அதன் உரிமை யாளருக்கு ரூ 3 ஆயிரம் அபராதம் விதித்தனர். சென்னையில் உள்ள ரியாஸ்அகமதுவின் செல்போனில் 3 ஆயிரம் அபராதம் விதித்துள்ள தாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி  அடைந்தார். 3 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட  வாகனம் என்று தெரிந்துகொண்டார். இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஒட்டன்சத்திரம் போக்குவரத்து போலீசார், திருடப்பட்ட பைக்கில் தப்பிச்சென்ற வாலிபரை தேடி வருகின்றனர். 

;