தஞ்சாவூர், பிப்.21- நூறு நாள் வேலைத்திட்டத்தில் நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள கூலியை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அம்மாபேட்டை ஒன்றியக் குழுக்கள் இணைந்து, வெள்ளிக்கிழமையன்று இரு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். கோவிலூரில், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.நம்பிராஜன் தலைமையிலும், அம்மாப்பேட்டையில், ளஅகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.கே.சேகர் தலைமையிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் திரண்டனர். போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், வி.தொ.ச மாநிலக் குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரவி மற்றும் கட்சி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்களுடன் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “தாமதமின்றி 100 நாள் வேலைத் திட்ட சம்பளம் வழங்கப்படும். 100 நாள் வேலை தொடர்ந்து வழங்கப்படும். பணித்தளப் பொறுப்பாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார்கள்” என உறுதியளித்தனர். இதையேற்று இரு இடங்களிலும் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.