districts

img

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ. 4.13 லட்சம் மோசடி : இருவர் கைது

தஞ்சாவூர், மே 14 - கும்பகோணம் அருகே சமூக வலைதளம் மூலம் வெளிநாட்டு வேலை எனக் கூறி ரூ. 4.13 லட்சம் மோசடி செய்த இருவரைக் காவல் துறையினர் திங்கள்கிழமையன்று  கைது செய்தனர். கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த சக்கரபாணி (37) சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் வேலைவாய்ப்பு என பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தைப் பார்த்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு சக்கரபாணி தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், உறுதியாக வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.  மேலும், சக்கரபாணியிட மிருந்து வாட்ஸ் ஆப் மூலம் பயோ டேட்டா, சான்றிதழ்களையும் பெற்றார். முதல் தவணையாக விண்ணப்பக் கட்டணமாக ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை தனது வங்கிக் கணக்கில் பெற்றுக் கொண்டு, சக்கரபாணியை அந்த நபர் நம்ப வைத்து பல பொய்யான காரணங்களைக் கூறி தனது வங்கிக் கணக்குக்கு ரூ. 2.04 லட்சத்தைப் பெற்றார். இதேபோல, சக்கரபாணியின் நண்பர் மதன்பாபுவையும் அந்த நபர் நம்ப வைத்து ரூ. 2.09 லட்சம் பணத்தையும் இணையவழி மூலம் பெற்றார். ஆனால், இருவருக்கும் நீண்ட நாள்களாக வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதுடன், பணத்தைத் திரும்பக் கேட்டபோது அழைப்பையும் துண்டித்துவிட்டார். இது குறித்து தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில் சக்கரபாணி கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் ரோஸ்லின் அந்தோணியம்மாள் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.  இதில், கைப்பேசி கோபுர சமிக்ஞை மூலம் ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்துக்கு உள்பட்ட ஜெரத்தல் காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த பெருமாள் மகன் ஜெயாநந்தன் (30), திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்துக்கு உள்பட்ட பாமணி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் விவேக் (29) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் இருவர் மீதும் பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

;