தஞ்சாவூர், மே.14 - அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து தஞ்சாவூரில் சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தொழில்நுட்பப் பிரிவில் பணி நியமனம் இல்லை, தேவையான உதிரிபாகங்கள் வழங்காததால் முறையாக பேருந்துகளை இயக்க முடியவில்லை. விபத்து என்றால் ஓட்டுநர் பொறுப்பு, வருவாய் குறைவு என்றால் நடத்துநர் பொறுப்பு, பயண முறிவு என்றால் தொழில்நுட்ப பணியாளர் பொறுப்பு என தொழிலாளர்களை காரணம் காட்டி பணிஇடைநீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தஞ்சாவூர் பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சா.செங்குட்டுவன் தலைமை வகித்தார். அரசு விரைவு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் பி.வெங்கடேசன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் ராஜா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் உரையாற்றினர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் நிறைவுரையாற்றினார். சிஐடியு நிர்வாகி ரஜினி, பணிமனை பொருளாளர் முருகேசன், துணைத் தலைவர் பரத்ராஜன், பணிமனை கிளைச் செயலாளர் அ.செ.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.