தூத்துக்குடி, ஜூலை 24
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தொழிற்பேட்டையில் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு சொந்தமான கோவில்பட்டி மேட்ச் கம்பெனி என்ற தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வரு கிறது. அந்த ஆலையின் அலுவலகத்தில் திங்களன்று காலையில் திடீரென அதிகளவில் புகைமூட்டம் வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர்கள் அலுவலக அறைக்கு சென்று பார்த்தபோது தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் இருந்த கோப்புகள், தீப்பெட்டி இயந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 12 முதல் 15 லட்சம் வரை இருக்கும் கூறப்படுகிறது . காலையில் என்பதால் பணியாளர்கள் யாரும் வரவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.